×

அரசு மருத்துவமனையில் உலக பக்கவாதம் தினம் குறித்த விழிப்புணர்வு

கோவை, நவ. 6:  கோவை அரசு மருத்துவமனையில் உலக பக்கவாதம் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மருத்துவமனையின் டீன் அசோகன், புறநோயாளிகளுக்கு பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இது குறித்து மருத்துவமனையின் டீன் அசோகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலக பக்கவாதம் தினம் அக்டோபர் 29ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. பக்கவாதம் என்பது மாரடைப்புக்கு சமமானது. மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு, ரத்தக்கசிவு ஏற்படுவதால் ஏற்படுகிறது. சர்க்கரை நோய், புகைப்பிடித்தல், அதிக கொழுப்பு, இதய நோய் காரணமாகவும் ஏற்படும். ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டவுடன் நிமிடத்திற்கு நிமிடம் மூளைக்கு செல்லும் லட்சக்கணக்கான செல்கள் அழியும். இதனால், கை,கால் செயல் இழப்பு, முகத்தில் பாதிப்பு, நடப்பதில் தடுமாற்றம், கண்பார்வை இழத்தல், பேசுவதில் சிக்கல் ஏற்படும்.

கோவை அரசு மருத்துவமனையில் பக்கவாதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க வசதிகள் உள்ளது. அதிநவீன சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. பக்கவாதம் ஏற்பட்ட 3 மணி நேரத்தில் இருந்து நான்கரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்தால் இன்ட்ராவாசுகுலர் த்ராமோலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும். தற்போது வரை 16 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். இதில், கடந்த 27ம் தேதி கோவை ஆலாந்துறை பகுதியை சேர்ந்த கருப்புச்சாமி(37) என்பவர் கண் தெரியாத நிலையில், நடக்க முடியாத நிலையில் அட்மிட் செய்யப்பட்டார். அவர் பக்கவாதம் பாதிப்பு ஏற்பட்ட சிறுதி நேரத்தில் சேர்ந்ததால் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வருகிறார். எனவே, பக்கவாதம் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்தால் அவர்களை குணப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : World Stroke Day ,Government Hospital ,
× RELATED செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம்