×

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் பள்ளி செல்லாத 7 ஆயிரம் வடமாநில சிறுவர், சிறுமிகள்

கோவை, நவ.6:  கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் 7 ஆயிரம் வடமாநில குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கும் பணி முடங்கி விட்டது.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்தினருடன் வசிப்பதாக தெரிகிறது. இவர்களின் குழந்தைகள் பலர் பள்ளி செல்ல இயலாத நிலையில் உள்ளனர்.
ஒடிசா, பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் கோவை மண்டலத்தில் அதிகமாக வசிக்கின்றனர். இவர்களின் குழந்தைகள் தமிழ் வழியிலும், அவர்களது தாய்மொழி வழியிலும் பள்ளிகளில் சேர்ந்து படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் வடமாநில குழந்தைகளுக்காக பிற மொழி பாடங்களை கற்று தரும் ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை விடப்பட்டு வந்தது.

குறிப்பாக மில், விசைத்தறி, பவுண்டரி அதிகமுள்ள, வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிகளில் பள்ளி கல்வித்துறை, வருவாய்த்துறை, தொழிலாளர் துறை, குழந்தை ெதாழிலாளர் மீட்பு ஆதரவு மையத்தினர் ஆய்வு நடத்தவேண்டும் என்றும், பள்ளி செல்லாத, பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு அவர்களது தாய் மொழி அல்லது தமிழ் வழி பாடத்தை கற்று தரவேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை குழந்தைகளை மீட்க, பள்ளியில் சேர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் பிற மாநிலத்தை சேர்ந்த பள்ளி செல்லாத  7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 5 வயது முதல் 14 வயது வரையுள்ள சிறார் இருப்பதாக தெரிகிறது. இவர்களை பள்ளியில் சேர்க்க  முயற்சிக்கவில்லை.

கோவை மண்டலத்தில் அரசு பள்ளிகளில் ஒரியா, இந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம் கற்று தர ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தாய் மொழி கல்வி கிடைக்காத நிலையில், வடமாநில குழந்தைகள் பலர் பள்ளியில் சேர்ந்து படிக்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிகிறது. சில பள்ளிகளில் வடமாநில குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு தமிழ் மொழியில் கல்வி கற்கின்றனர். பள்ளியில் சேர்ந்தாலும் இவர்கள் மொழி பிரச்னையால் அவர்கள் தவிப்பதாக தெரிகிறது. பிற மாநில குழந்தைகளின் கல்விக்கான திட்டங்கள் தொடர்ந்து அலட்சியப்படுத்தப்பட்ட வருவதாக புகார் எழுந்துள்ளது. புலம்பெயர்ந்து தமிழகம் வந்து தொழிலாளர்களாக வேலை செய்பவர்களின் குழந்தைகளுக்காக அவர்களது தாய் மொழியில் பாட புத்தகம் அச்சடித்து கல்வி கற்று தரும் திட்டம் கடந்த 8 ஆண்டிற்கு முன் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த திட்டம் பெயரளவிற்கு கூட செயல்படுத்தப்படாமல் முடக்கப்பட்டது. வட மாநில குழந்தைகளுக்கு அவர்களது தாய் மொழியில் பாட புத்தகம் தயார் செய்யவும் பாடநூல் கழகம் அலட்சியம் காட்டி வருகிறது. வடமாநில குழந்தைகளை மீட்கவும், கல்வி கற்று தரவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Coimbatore ,North ,school ,children ,girls ,Erode ,Tirupur ,
× RELATED கோவை பாராளுமன்ற தொகுதி தேர்தல்...