×

உள்ளாட்சி தேர்தல் எதிர்பார்ப்பு ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க தடை

கோவை, நவ.6: கோவை நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்களை சீரமைக்கும் பணி நடக்கிறது. இதைத்தொடர்ந்து உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தை தொடர்ந்து குறிச்சி குளம் உட்பட மேலும் சில குளங்கள் சீரமைக்கப்படவுள்ளது. நரசாம்பதி, செல்வாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வசிந்தாமணி, முத்தண்ணன் குளம், சிங்காநல்லூர் குளம், குறிச்சி, பெரியகுளம் கரை மற்றும் வாய்க்கால் கரையோர வீடுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் பணியால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் ஒத்தி வைத்திருந்தது. தற்போது ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உக்கடம் பெரியகுளத்திற்கு நொய்யல் ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் சேத்துமா வாய்க்காலில் சுமார் 250 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தெரிகிறது.  இதேபோல் சுண்ணாம்பு கால்வாய் முதல் வெள்ளலூர் குளம் வரை செல்லும் ராஜ வாய்க்காலில் 500க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் இருக்கிறது.

இந்த வீடுகளை அகற்றாமல் விட்டதால் இங்கே சீரமைப்பு பணி எதுவும் நடத்தவில்லை. வீடுகளை அகற்றி வாய்க்கால் தூர் வாரினால் குளங்களுக்கு அதிகளவு தண்ணீர் வரும் என மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். முத்தண்ணன் குளம், கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி குள வாய்க்கால் கரைகளை அகற்றி நீர் தேக்கங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீர் நிலை புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்து தரப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. முத்தண்ணன் குளத்தின் கரையில் 1,450 வீடுகள் உள்ளது.
இந்த வீடுகளை இடிக்க சமீபத்தில் மழை பெய்தபோது நோட்டீஸ் தரப்பட்டது. உக்கடம் கெம்பட்டி காலனி, சி.எம்.சி. காலனி உள்ளிட்ட பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை மழைக்கால அபாயம் கருதி காலி ெசய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால், இடிப்பு பணி நடத்தவும், வீடுகளை அகற்றும் பணி செய்யவும், மாநகராட்சி, குடிசை வாரியத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்கு பிறகே வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : election ,demolition ,homes ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்