×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 32,606 தெரு விளக்குகள் எல்.இ.டி.க்களாக மாற்றம்

கோவை, நவ. 6:  கோவை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகர் பகுதியில் உள்ள தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 32 ஆயிரத்து 606 விளக்குகள் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளன என மாநகராட்சி துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி கூறியுள்ளார். கோவை மாநகர் பகுதிகளில் 58 ஆயிரத்து 878 தெரு விளக்குகள் உள்ளன. இவற்றில் 90 சதவீதம் விளக்குகள் சோடியம் விளக்குகளாகும். தெரு விளக்குகளை பராமரித்து அதற்கு மின் கட்டணத்தை கோவை மாநகராட்சி செலுத்தி வருகிறது.
இதற்காக ஆண்டுக்கு ரூ.3 கோடி வரை மின் கட்டணம் செலுத்தப்படுகிறது. இந்த செலவை தவிர்க்க கோவை மாநகராட்சியால் உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் தினமும் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் சூரிய ஒளி தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மின்சாரத்தை பயன்படுத்தி சோடியம் விளக்குகள் அகற்றப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக கடந்த மே மாதம் எல்.இ.டி. விளக்குகள் வரவழைக்கப்பட்டு தர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் பணிகள் கடந்த ஜூலை மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இது குறித்து மாநகராட்சி துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி நம்மிடம் கூறுகையில், ‘‘தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் 32 ஆயிரத்து 606 விளக்குகள் மாற்றப்பட்டுள்ளன. இதில் கிழக்கு மண்டலத்தில் 12 ஆயிரத்து 268 விளக்குகளும், மேற்கு மண்டலத்தில் 5 ஆயிரத்து 203 விளக்குகளும், வடக்கு மண்டலத்தில் 5 ஆயிரத்து 203 விளக்குகளும், தெற்கு மண்டலத்தில் 3 ஆயிரத்து 250 விளக்குகளும், மத்திய மண்டலத்தில் 6 ஆயிரத்து 682 விளக்குகளும் மாற்றப்பட்டுள்ளன. மீதம் உள்ள 26 ஆயிரத்து 272 விளக்குகளும் டிசம்பர் மாத இறுதிக்குள் மாற்றப்பட்டுவிடும்’’ என்றார்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்