கரும்பு நிலுவைத்தொகையை வழங்காவிட்டால் மருந்து பாட்டிலுடன் குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்போம்

திருவண்ணாமலை, நவ.6:  தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு நிலுவை தொகை உடனடியாக வழங்காவிட்டால், மருந்து பாட்டிலுடன் கூட்டத்தில் பங்கேற்போம் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.திருவண்ணாமலை பிடிஓ அலுவலகத்தில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் அன்பழகன் தலைமை தாங்கினார். தாசில்தார் அமுலு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:  ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்ய உள்ள 44 பொருட்களுக்கு தடைவிதித்து, இதனை கைவிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவை தொகையினை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி பல முறை கோரிக்கை வைத்தோம். கலெக்டர் 10 நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனாலும் இதுவரை வழங்கவில்லை.

எனவே, மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு முன்பாக நிலுவை தொகையை வழங்காவிட்டால், விவசாயிகள் அனைவரும் மருந்து பாட்டில்களுடன் வந்து பங்கேற்போம். மேலும், அங்கேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பூக்கள் வரத்து அதிகம் உள்ளதால், மாவட்டத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.தொடர்ந்து  விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுவினை வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Tags : discount meeting ,
× RELATED சொட்டு நீர் பாசன மானியத்தில் கரும்புக்கு மட்டும் முக்கியத்துவம்