×

நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால் காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் மரண பள்ளங்கள்


காஞ்சிபுரம், நவ.6: காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில் உள்பட பிரசித்தி பெற்ற பல்வேறு கோயில்களில் சுவாமி தரிசனத்துக்காகவும், திருமணம், பண்டிகை போன்ற  விழாக்காலங்களில் உடுத்த தனிச்சிறப்பு வாய்ந்த பட்டுப்புடவைகள் வாங்கவும் காஞ்சிபுரத்துக்கு ஏராளமானோர் வருகின்றனர். இதையொட்டி, காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி, திருத்தணி, அரக்கோணம், வேலூர், பெங்களூரு,  சென்னை, மாமல்லபுரம், விழுப்புரம், புதுச்சேரி, சிதம்பரம், திருச்சி, மதுரை உள்பட பல்வேறு பெரிய நகரங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து  கழகம் சார்பில் சுமார் 726 அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தினமும் இந்த பஸ் நிலையத்துக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

மேலும் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வெளியூர் செல்ல இதே பஸ் நிலையத்துக்கு தினமும் வந்து செல்கின்றனர். இங்கு பயணிகள் சிறிது நேரம் தங்கி இளைப்பாற ஓய்வறை, குடிநீர் வசதி  இல்லாத நிலையே உள்ளது. வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயணிகள் காத்திருக்க வசதியாக மேற்கூரை போன்றவையும் முறையாக இல்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் பெய்த தொடர் மழையால் பஸ் நிலையத்தில் உள்ள  பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேதம் அடைந்துள்ளது. சுமார் 2அடிக்கு மேடு பள்ளங்களாக உள்ளதால் பஸ்களை இயக்குவதும் சிரமமாக உள்ளதாக டிரைவர்கள் தெரிவிக்கின்றனர்.அதே நேரத்தில், பஸ்களில் பயணம் செய்வதற்காக நடந்து  செல்லும் பொதுமக்கள், பயணிகள் அந்த பள்ளங்களில் விழுந்து காயமடைகின்றனர். இதுபற்றி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்து, பள்ளங்களை சீரமைக்கும்படி வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை  என புகார் கூறப்படுகிறது.எனவே, நகராட்சி அதிகாரிகள் பஸ் நிலையத்தில் முறையாக ஆய்வு செய்து, அங்குள்ள பள்ளங்களை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : bus stand ,Kanchipuram ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை