×

செங்கல்பட்டு வல்லம் ஊராட்சியில் ₹10 லட்சத்தில் புதிய குடிநீர் கிணறு

செங்கல்பட்டு, நவ. 6: செங்கல்பட்டு வல்லம் ஊராட்சியில், தினகரன் செய்தி எதிரொலியாக ₹10 லட்சத்தில் புதிய குடிநீர் கிணறு அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வல்லம் ஊராட்சியில் 10  ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் நிலவும் குடிநீர் தேவையை போக்க கடந்த  2014-2015 நிதியாண்டில்   வல்லம் ஏரிக்கரையில் ₹10 லட்சம் செலவில் புதிய குடிநீர் கிணறு அமைக்கப்பட்டது. இந்த கிணறு  மூலம் தண்ணீர் எடுத்து பைப்லைன் மூலம் ஊராட்சி பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இந்தவேளையில், கடந்த 5 நாட்களுக்கு முன் குடிநீர் கிணறு சரிந்து விழுந்து நாசமானது. இதனால் தண்ணீர் சப்ளை செய்ய முடியவில்லை.  இதையடுத்து கடந்த 4 நாட்களாக  திருப்போருர் கூட்ரோடு, வல்லம், யாதவர் தெரு, பல்லவன் தெரு, மாரியம்மன் கோயில் தெரு உள்பட பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து தினகரன்  நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று சரிந்த கிணற்றை காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், பொறியாளர் மாரீஸ்வரன்,  ஊராட்சி செயலர் ராமானுஜம் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, கிணற்றை மீண்டும் புதுப்பிக்க இயலாது என அவர்கள் கூறினர். இதனால் வல்லம் ஊராட்சியில் குடிநீர் தேவையை போக்க மாற்று இடத்தில் ₹10 லட்சம் செலவில் புதிய  கிணறு அமைக்க முடிவு செய்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Chengalpattu Vallam Panchayat ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி...