மண்ணிவாக்கத்தில் பரபரப்பு பிரபல ரவுடியின் கூட்டாளி மர்மச்சாவு

கூடுவாஞ்சேரி, நவ. 6:  வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் சண்முகா நகர், 7வது தெருவில் உள்ள தனியார் பள்ளி அருகில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. நேற்று காலை அந்த கட்டிடத்தில், ரத்த வெள்ளத்தில் வாலிபர் சடலம்  இருந்தது. இதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அங்கு ஒரு வாலிபர் கழுத்து அறுக்கப்பட்டு, நின்றபடி கயிற்றில் தூக்கில் தொங்கியபடி ரத்த வெள்ளத்தில்  சடலமாக கிடந்தது தெரிந்தது. இதையடுத்து சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ேமலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் சடலமாக கிடந்தவர் மண்ணிவாக்கம் எம்ஜிஆர் தெருவை  சேர்ந்த கணேஷ் (27) என்றும், பிரபல ரவுடி போகி கிருஷ்ணனின் கூட்டாளி என்றும் தெரிந்தது.  இதற்கிடையில், கணேஷ் சடலமாக கிடந்ததை அறிந்ததும், அவரது உறவினர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டனர். அங்கு, கணேஷை,  மர்மநபர்கள் கடத்தி சென்று அடித்து கொலை செய்தனர். நேற்று முன்தினம் மாலை ஒரு கும்பல் அவரை கொலை செய்ய துரத்தி வந்தனர். ஆனால், அவர் தப்பிவிட்டார். இந்தவேளையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறி கதறி  அழுதனர். இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், கண் தெரியாத அவரது தாய்க்கு கணேஷ் தினமும் சமையல் செய்து கொடுத்துவிட்டு பெயின்டர் வேலைக்கு சென்று வருவார். இதேபோல் நேற்று காலை 7 மணியளவில் தாய்க்கு சமையல்  செய்து கொடுத்துவிட்டு, அவருடன் வேலை செய்யும் ஒருவருடன் பைக்கில் வேலைக்கு சென்றார்.

இந்நிலையில், அவர் கழுத்து அறுக்கப்பட்டு நின்ற கோலத்தில் கயிற்றால் தூக்கு மாட்டி சடலமாக கிடந்துள்ளார். இதுபற்றி புகார் கொடுத்தால் கணேஷுக்கு பைத்தியம் பிடித்துள்ளது. அதனால் அவரே கழுத்தை அறுத்து கொண்டு தூக்குப்போட்டு  தற்கொலை செய்து கொண்டதாக என கூறி போலீசார் புகார் வாங்க மறுக்கின்றனர்.சடலம் கிடந்த இடத்தில் எங்களை போலீசார் அழைத்து சென்று அடையாளம் காட்டவில்லை. முன்விரோதத்தில் அவர் கடத்தி கொலை செய்யப்பட்டார் என  கூறினால் போலீசார் எங்களை துரத்துகின்றனர். எனவே, இதனை உயரதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இதுபற்றி போலீசாரிடம் கேட்டதற்கு, மண்ணிவாக்கம் முன்னாள் ஊராட்சி தலைவரின் கணவர்  புருஷோத்தமன் கொலை வழக்கு, மற்றொரு வழக்கு கணேஷ் மீது நிலுவையில் உள்ளது. தற்போது அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால், அவர் தனக்கு தானே கழுத்தை அறுத்து கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை  செய்துகொண்டார் என்றனர். இச்சம்பவத்தால் மண்ணிவாக்கத்தில் நேற்று மாலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>