×

காஞ்சிபுரத்தின் முக்கிய சாலைகளில் சாலை தடுப்புகள் அமைக்காததால் அடிக்கடி விபத்து

காஞ்சிபுரம், நவ.6: காஞ்சிபுரத்தில் விழாக்காலம் மற்றும் அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு அகற்றப்பட்ட சாலை தடுப்புகள் மீண்டும் அமைக்கப்படாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை  எடுக்குமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மேற்கு ராஜவீதி, கிழக்கு ராஜவீதி, அன்னை இந்திராகாந்தி சாலை, காமராஜர் சாலை, காந்தி சாலை ஆகிய பகுதிகளில் சாலையின்  நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருவழிப்பாதையாக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து ஓரளவுக்கு சீரடைந்தது. இந்த வேளையில் கடந்த மே மாதம், வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் நடந்தது. இதன், முக்கிய  நிகழ்வான கருடசேவை மற்றும் திருத்தேரோட்டத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை மற்றும் சுவாமி வீதியுலாவை முன்னிட்டு சாலையின் நடுவே இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன.

இதைதொடர்ந்து, 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் நடந்தது. இதனால், அங்கு மீண்டும் சாலை தடுப்புகள் அமைக்காமல் விட்டு வைத்தனர். தொடர்ந்து காமாட்சி  அம்மன் கோயில் பிரம்மோற்சவம்  நடைபெற்றதால் சாலை தடுப்புகள் அமைக்கவில்லை. இதனால் காந்தி சாலையில் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்னறன. மேலும் வெளியூர்களில் இருந்து  பட்டுச்சேலை எடுக்க வருவோர் காந்தி சாலையில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளூர் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல், பஸ் நிலையம் அருகில் பைக்கில்  வருவோர், ஷேர் ஆட்டோக்கள், பஸ்களும் சாலை தடுப்பு இல்லாததால் திடீரென வலதுப்பக்கம் பஸ் நிலையத்துக்குள் செல்வதற்காக திரும்புகின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலாகிறது. எனவே, பெரும்  விபத்து ஏற்படும் முன், மீண்டும் சாலை தடுப்புகளை அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள்் வலியுறுத்துகின்றனர்.

Tags : Road accidents ,Kanchipuram ,
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்