பல்லாவரம் நகராட்சி பகுதியில் மக்களை விரட்டி கடிக்கும் தெரு நாய்கள்

தாம்பரம், நவ. 6: பல்லாவரம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் பீதியுடன் சென்று வருகின்றனர். பல்லாவரம் நகராட்சி 49 வார்டுகளில்,  ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். நகராட்சிக்கு உட்பட்ட நெமிலிச்சேரி, ராபின் நகர், நாகப்பன் தெரு, முல்லை தெரு, குறிஞ்சி  தெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த  நாய்களுக்கு தடுப்பூசி, கருத்தடை செய்யப்படுவது இல்லை. இவைகள் வீடுகள் மற்றும் இறைச்சி கடைகளில் கிடைக்கும் கழிவுகளை சாப்பிட்டு, ஆங்காங்கே சுற்றித் திரிகின்றன. இதில் பல நாய்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு, சொறிப்  பிடித்துள்ளது. கடந்த சில நாட்களாக சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் நாய்கள், இரவில் நடந்து செல்பவர்களையும், பைக்கில் செல்பவர்களையும் துரத்தி துரத்தி கடிக்கின்றன. வெறியுடன் துரத்தும் நாய்களை பார்த்து, வாகன  ஓட்டிகள் பீதியில் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் இந்த நாய்கள் மெயின் ரோடுகளில் குறுக்கும், நெடுக்குமாக செல்வதால், வாகன ஓட்டிகளும் விபத்தை சந்திக்கின்றனர். அதேபோல கிழக்கு தாம்பரம் 17வது வார்டு கலைமேகம்  தெருவிலும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அந்த தெருவில் பள்ளி இருப்பதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தோடு சென்றுவரும் சூழ்நிலை உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்குள்ள தெரு நாய்களை பிடித்து  சென்று கருத்தடை, தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

>