×

வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டையில் தொட்டியில் நிரம்பி வழியும் குப்பையால் சுகாதார சீர்க்கேடு

வாலாஜாபாத், நவ. 6: வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டையில் பள்ளி, அங்கன்வாடி மையம் அருகே நிரம்பி வழியும் குப்பை தொட்டியால், சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. வாலாஜாபாத் ஒன்றியம்  முத்தியால்பேட்டை ஊராட்சியில், 1800க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு வங்கிகள், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற கட்டிடம், நடுநிலைப் பள்ளி, நூலகம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.  முத்தியால்பேட்டையில் இருந்து களியனூர் செல்லும் சாலையை ஒட்டி நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் செயல்படுகின்றன. இந்த அங்கன்வாடி மையத்தை ஒட்டியே ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஒரு குப்பை தொட்டி  வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், அலுவலகங்களில் சேரும் குப்பை, இந்த தொட்டியில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளை ஊராட்சி துப்புரவு ஊழியர்கள், அப்புறப்படுத்துவது வழக்கம். இந்நிலையில், மேற்கண்ட  குப்பைத்தொட்டியில், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக குப்பை நிரம்பி, கீழே விழுந்து கிடக்கிறது. இதனால், அங்கு குப்பை கொட்டுபவர்கள், தொட்டியின் அருகில் வீசி செல்கின்றனர். இதையொட்டி அப்பகுதியில் மலைபோல் குப்பை குவிந்து  காணப்படுகிறது.

இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, அருகில் உள்ள அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், முத்தியால்பேட்டை ஊராட்சியில், ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குப்பை தொட்டிகளில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டி அதனை ஊராட்சி துப்புரவு  ஊழியர்கள், அகற்றப்படுகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, இங்குள்ள குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் சரிவர அகற்றுவதில்லை. இதனால், ஆங்காங்கே குப்பைகள் சேர்ந்து கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  மேலும், நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் அருகிலேயே குப்பை குவியல்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனால், மாணவ, மாணவிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாய நிலையும் உள்ளது. எனவே, பெரும் அசம்பாவித  சம்பவம் நடப்பதற்கு முன், ஊராட்சி நிர்வாகம் சுகாதாரத்தை காக்கும் வகையில், ஊராட்சியில் உள்ள அனைத்து குப்பைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Valagabad Union Muthalpet ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...