×

கண்டிகை அரசு பள்ளி, மேலக்கோட்டையூர் பெட்ரோல் பங்க் அருகில் 24 மணி நேரமும் இயங்கும் டாஸ்மாக் பார்

கூடுவாஞ்சேரி, நவ. 6: வண்டலூர் அருகே கண்டிகை அரசு பள்ளிகள் மத்தியிலும், மேலக்கோட்டையூர் பெட்ரோல் பங்க் அருகிலும் டாஸ்மாக் பார் 24 மணி நேரமும் செயல்படுகிறது. வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை கண்டிகையில் இருந்து  வேங்கடமங்கலம் செல்லும் சாலையோரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அருகிலும், மேலைகோட்டையூர் பெட்ரோல் பங்க் எதிரே உள்ள ஏரியிலும் கடந்த 3 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. இந்த கடைகள் அமைப்பதற்கு,  அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், அதிகாரிகள் அதை பொருட்படுத்தாமல், திறந்து வைத்தனர்.மேற்கண்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, பார் அமைத்துள்ளது. இங்கு மதுபானங்களை பதுக்கி வைத்து, 24  நேரமும் கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. இந்த பார்களில் ஆளுங்கட்சி பிரமுகர்கள், மதுபாட்டில்களை விற்பனை செய்வதால், அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.இதுகுறித்து அப்பகுதி  மக்கள் கூறுகையில், கண்டிகையில் இருந்து வேங்கடமங்கலம் செல்லும் சாலையோரத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு, 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதேபோல், வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை  கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 450 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

இந்த பள்ளிகளில் வேங்கடமங்கலம், கண்டிகை, ரத்தினமங்கலம், நல்லம்பாக்கம், கீரப்பாக்கம், முருகமங்கலம், மேலைகோட்டையூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.பள்ளிகளின் அருகிலேயே டாஸ்மாக்  கடை செயல்படுகிறது. இரவு நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கும் குடிமகன்கள், அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை தாண்டி சென்று, பள்ளி வளாகத்திலேயே மது குடிக்கின்றனர். பின்னர், அங்கேயே பாட்டில்களை போட்டு  உடைத்து நாசப்படுத்துகின்றனர்.இதையடுத்து, காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள், அதனை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு திடலில் மாணவர்களின் கால்களில் பாட்டில்கள்  குத்துவதால் படுகாயடைகின்றனர். பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் மாணவிகளிடம் குடிபோதையில் கலாட்டா செய்கின்றனர்.இதுபோன்ற சம்பவம் நாளுக்குநாள் அதிகரிக்கிறது. மேலும், பள்ளி வளாகத்திலேயே சிறுநீர் கழிப்பது, கஞ்சா  அடிப்பது, சூதாட்டம் உள்பட பல்வேறு சமூக விரோத செயல்களும் நடக்கிறது. இதை பொதுமக்கள் தட்டிகேட்டால், ரவுடி கும்பலை அழைத்து வந்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

அதே நேரத்தில் மேற்கண்ட டாஸ்மாக் பாரில் 24 மணிநேரமும் மதுபானங்களை பதுக்கி வைத்து, கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், போலீசாரிடமும் பலமுறை புகார் கூறியும்  கண்டு கொள்ளவில்லை. எனவே, அரசு பள்ளிகள் அருகில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். பார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என்றனர்.

கல்லா கட்டும் டாஸ்மாக் அதிகாரிகள்
ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையோரத்தில், தற்போது புதிதாக திறந்துள்ள டாஸ்மாக் கடை (கடை எண் 4381) கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூரில் பல ஆண்டுகளாக இயங்கும் டாஸ்மாக் கடை, கண்டிகை டாஸ்மாக் கடை, வண்டலூர் -  வாலாஜாபாத் சாலையில் அடுத்தடுத்துள்ள டாஸ்மாக் கடை, வண்டலூர் ஏரி மற்றும் ஓட்டேரியில் இயங்கும் டாஸ்மாக் கடை, மேலைக்கோட்டையூர் மாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளின் அருகில் உள்ள பார்களில், 24  மணிநேரமும் மதுபானங்கள் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. பல இடங்களில் டாஸ்மாக் கடை எண் மற்றும் பெயர் பலகை இல்லை. இது குறித்து, டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் போலீசில் புகார் செய்தால், சம்பந்தப்பட்ட  பார் உரிமையாளர்களிடமும், ஆளுங்கட்சி பிரமுகர்களிடமும் அவர்களை காட்டி கொடுத்துவிடுகின்றனர். இதற்கு பலனாக ஒரு ெதாகையை பெற்று கொள்கின்றனர். இதனால், புகார் கொடுக்கும் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்  ஏற்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஜிஎஸ்டி  சாலையில் புதிய கடை உதயம்
விபத்துகளை தடுக்கவும், உயிர்பலிகளை குறைக்கவும் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மதுபான கடைகளை அகற்ற அரசுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் படிப்படியாக  குறைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையோரத்தில் ஆளுங்கட்சி பிரமுகர்களின் உதவியோடு புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு, கடந்த ஒரு வாரமாக அமோக  விற்பனை நடக்கிறது. இந்த கடைக்கு பைக், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் போட்டி, போட்டு எதிரும், புதிருமாக வரும் குடிமகன்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Kandi Government School ,Task Bar ,Melakkottaiyur Petrol Punk ,
× RELATED கூடுவாஞ்சேரி அருகே டாஸ்மாக் பார் ஊழியர் கொலை: மர்மநபர்களுக்கு வலை