×

மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளம்போல் நிற்கும் அவலம்

மாமல்லபுரம், நவ.6: மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே பல நாட்களாக குளம்போல் தேங்கியுள்ள தண்ணீருடன், கழிவுநீர் கலந்து நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்கள்  மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் புராதான  சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணய் உருண்டை கல், புலிக்குகை உள்பட பல முக்கிய இடங்களும் பல்லவர்கள் காலத்து சிற்பங்களும் உள்ளன.இதனை காண தினமும் பல்வேறு மாவட்டங்கள்,  மாநிலங்கள், நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். சிறப்பு வாய்ந்த மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில் அருகே வடக்கு பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.சாதாரண மழை பெய்தாலும், இந்த பள்ளத்தில்  மழைநீர் தேங்கி நிற்கும். அதேபோல் கடல் அலை அதிகமானாலும், கடல் நீர் பள்ளத்தில் குளம்போல் தேங்குகிறது. இந்த தண்ணீரில், மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல், ரெஸ்ட்டாரன்ட்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் கலப்பதால் அப்பகுதி  முழுவதும் கடும் துர்நாற்றம்வீசுகிறது.

இதில், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி அங்குள்ள பொது மக்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளையும் கடிப்பதால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுற்றுலா பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.  மேலும் பல நாட்களாக அந்த இடத்தில் தண்ணீர் தேங்கி பாசை பிடித்து, குப்பைகள் சூழ்ந்து காணப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மூக்கை பிடித்தபடி  செல்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் காலத்து சிற்ப்பங்களை காண உள்நாட்டு மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர். முக்கிய புராதான சின்னமான கடற்கரை கோயில்  அருகே பல நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீருடன், ஓட்டல் மற்றும் ரெஸ்ட்டாரன்ட்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால் கொசுக்கள் அதிகமாகி, பொதுமக்களை கடிக்கிறது.இதனால் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா உள்பட  பல்வேறு மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர். எனவே மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம்,  பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, கடற்கரை கோயில் அருகே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி, ஓட்டல் மற்றும் ரெஸ்ட்டாரன்ட்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தடுத்து நிறுத்த உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Mamallapuram Beach Temple ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி, சீன அதிபர்