×

அச்சிறுப்பாக்கம் அருகே அதிகாரிகளை கண்டித்து சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டம்

மதுராந்தகம், நவ.6: அச்சிறுப்பாக்கம் அருகே அதிகாரிகளை கண்டித்து, அண்ணங்கால் கிராமத்தில் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மேல்மருவத்தூர் அடுத்த கடமலைபுத்தூர் கிராமம் வழியாக  ஒரத்தி, புறங்கால் கிராமம் முதல் அண்ணங்கால் கிராமம் வரை செல்லும் 3 கிமீ தார்ச்சாலை அமைந்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளாக இந்தச்சாலை சீரமைக்கப்படாமல், குண்டும் குழியுமாக காணப்படுகிறது. லேசான மழை பெய்தாலும், சாலை  முழுவதும் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து அச்சிறுப்பாக்கம் ஒன்றிய அலுவலகம் மற்றும் பல்வேறு உயர்  அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள், இதுவரை சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தின் மழையின் காரணமாக அண்ணங்கால் கிராமத்தில் பழுதடைந்த சாலையில்  தண்ணீர் தேங்கி குளம்போல் ஆங்காங்கே காணப்படுகிறது. மேலும், சேறும் சகதியுமாக மாறியதால், நடக்க முடியாத சூழல் உள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அதிகாரிகளை கண்டித்து, சேறும் சகதியுமாக உள்ள சாலையில் நேற்று, நாற்று நடும் போராட்டம் நடத்தினர். இதில், அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு  தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்ட எல்லை ஓரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினர் மதுராந்தகம்,  செங்கல்பட்டு, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கானோர் பயணிக்கும் இந்த சாலை இவ்வளவு மோசமான நிலையிலும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதேநிலை தொடரும்  சூழ்நிலையில் நாங்கள் மேலும் பாதிக்கப்படுறோம். எனவே, அரசு உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இனியாவது, அதிகாரிகள் எங்களின்  நியாயமான கோரிக்கையை புரிந்து கொண்டு இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...