×

வனவிலங்குகள் வெளியே வருவதை தடுக்க செம்மர காடுகளுக்கு இயற்கை பாதுகாப்பு அரண்

திருவள்ளூர், நவ. 6:  காப்புக் காடுகளை விட்டு வனவிலங்குகள் வெளியேறுவதை தடுக்கவும், சமூக விரோதிகள் காட்டில் புகுந்து செம்மரங்களை வெட்டுவதை தடுக்கவும், முதற்கட்டமாக 50 கி.மீட்டர்  தூரத்திற்கு ரூ.62.50 லட்சம் மதிப்பில் இயற்கை பாதுகாப்பு அரண் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் பூண்டி, வெங்கல், செங்குன்றம், பள்ளிப்பட்டு, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பென்னலூர்பேட்டை உள்ளிட்ட 9 வனச் சரகங்களில் 70 ஆயிரம் ஹெக்டர்  பரப்பளவில் காப்புக் காடுகள் உள்ளன.  இந்த காப்புக் காடுகளில் செம்மரங்கள், சந்தனம், தேக்கு மரங்கள், யூகலிப்டஸ் மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. இந்த காப்புக் காடுகளில் மட்டும் 3.50 லட்சத்துக்கும் அதிகமான செம்மரங்கள்  வளார்ந்துள்ளன. மேலும், முந்திரி, மருது, மூங்கில், குங்கிலியம் போன்ற 80 ஆண்டுகள் பழமையான மரங்களும் உள்ளன.  செம்மரத்தின் உள்ளே இருக்கும் சிவப்பு நிற தண்டானது, சிறப்பு மருத்துவ குணம் கொண்டதாகும். தலைவலி, காய்ச்சல், சரும வியாதி, உடல் வெப்பத்தை தணிப்பது, தீப்புண், ஆறாத ரணம், கண் மற்றும் ரத்த  சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதனால், செம்மரத்திற்கு அதிக கிராக்கியும், விலையும் உள்ளது. வெளிநாடுகளில் செம்மரக் கட்டைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளதால், ஆந்திரா மற்றும் அதை ஒட்டி உள்ள தமிழகப் பகுதிகளில் இருந்து,  அதிக அளவில் செம்மரக் கட்டைகள் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளாக, செம்மரக் கடத்தல் அதிகரித்து வருகிறது. செம்மரக் கடத்தலை தடுக்கும் வகையில், வனத்துறை அலுவலகத்தில் இருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக காப்புக் காட்டில் ஆங்காங்கே  தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் சூரிய ஒளி மின்சாரம் மூலம் இயங்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், காப்பு காட்டில் புள்ளி மான்கள், முயல்கள், காட்டுப் பன்றிகள் அதிகமாக வசிக்கின்றன. இவை அடிக்கடி சாலைக்கு வருவதால் விபத்துகளில் சிக்கி பலியாகிறது. இதையடுத்து, சமூக விரோதிகள்  காடுகளுக்குள் புகாமல் தடுக்கும் வகையிலும், காப்புக் காடுகளை விட்டு வனவிலங்குகள் வெளியேறி சாலைக்கு வருவதை தடுக்கவும், முதற்கட்டமாக 50 கி.மீட்டர் தூரத்திற்கு ரூ.62.50 லட்சம் திட்ட  மதிப்பீட்டில் இயற்கை பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் முள்கற்றாழை, கிழவைக் குச்சிகள், முள்செடிகள் ஆகியவை மூன்று அடுக்குகளில் நடவு செய்யப்பட உள்ளது. இதற்காக சேலம் மாவட்டத்திலிருந்து 21 ஆயிரம் கிழவைக் குச்சிகள்  லாரிகளில் கொண்டு வரப்பட்டுள்ளன.  இதுகுறித்து வனத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘’மாவட்டத்தில் பூண்டி, வெங்கல் மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பழைமையான செம்மரங்கள் நன்றாக வளர்ந்து காணப்படுகின்றன.  இங்கு மட்டும் 3.50 லட்சத்திற்கும் அதிகமான செம்மரங்கள் உள்ளன. இந்த மரங்களைக் கடத்துவதை தடுக்கவும், வனவிலங்குகள் வெளியே செல்வதை தடுக்கவும் வனத்துறை மூலம் இயற்கை பாதுகாப்பு அரண் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக பூண்டி, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் உள்ள காப்புக் காடுகளில், 50 கி.மீட்டர் தூரத்திற்கு இயற்கை பாதுகாப்பு அரண் அமைக்க ரூ. 62.50 லட்சம் மதிப்பில் பணி  நடந்துவருகிறது’’ என்றார்.

Tags : Sheep forests ,
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...