×

பென்னலூர் பேட்டையில் மாட்டு தொழுவமாக மாறிய பஸ் நிலையம்

 ஊத்துக்கோட்டை, நவ.6: ஊத்துக்கோட்டை அருகே பென்னலூர்பேட்டையில் மாட்டு தொழுவமாக  மாறிய பஸ் நிலையத்தை  சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம், பென்னலூர்பேட்டை கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சுற்றியுள்ள  ராமலிங்காபுரம், அழகிரிபேட்டை,  வள்ளுவர்நகர், சீனிவாசபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளி இடங்களுக்கு செல்ல பென்னலூர்பேட்டைக்கு வர வேண்டும். அங்குள்ள பஸ் நிலையத்துக்கு வரும் தனியார்  மற்றும் அரசு பஸ் மூலம் சீத்தஞ்சேரி செல்கின்றனர். அங்கிருந்து திருவள்ளூர், பூந்தமல்லி,  மற்றும் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் ஆகிய பகுதிகளுக்கும், மேலும்  பென்னலூர்பேட்டையிலிருந்து  பூண்டி, கோயம்பேட்டிற்கும்,  ஆந்திர மாநிலம் நாகலாபுரம், நகரி ஆகிய பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர். இதனால் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில், பென்னலூர்பேட்டை  பஸ் நிலையத்தில் அப்பகுதிகளில் உள்ள மாடுகள் பகல், இரவு நேரத்தில் தங்குகிறது. சில நேரங்களில் மாடுகள் ஒன்றோடு ஒன்று மோதுகிறது. அப்போது அங்கு பஸ்சுக்காக  காத்திருக்கும் மாணவ, மாணவிகளை முட்டி தள்ளுகிறது.  இதில் மாணவர்கள் காயமடைகின்றனர். இது ஒருபுறமிருக்கு பஸ் நிலையம் முழுவதும் கழிவு பொருட்கள் பரவி துர்நாற்றம் வீசுவதால் பயணிகள்  பஸ் நிலையத்துக்கு வர அச்சப்படுகின்றனர். அதுமட்டுமின்றி பஸ்களும் எளிதாக வந்து செல்ல தடையாக உள்ளது.  எனவே பஸ் நிலையத்தில் உலாவரும் மாடுகளை பிடிக்கவும், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Bus station ,Bengaluru ,
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...