×

அரசு விதிகளை மீறும் அங்கன்வாடி பணியாளர்கள்: பெற்றோர் குற்றச்சாட்டு

திருவள்ளூர், நவ. 6: அங்கன்வாடி மையங்களை குறிப்பிட்ட நேரத்தில் திறக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 1975-76ம் ஆண்டில் துவங்கப்பட்ட அங்கன்வாடி மையங்களில், பிறந்தது முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள், கர்ப்பிணி, பாலுாட்டும் தாய்மார்கள்,  வளரிளம் பெண்களின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்கின்றனர். ‘’எழுச்சிமிகு முன் பருவ குழந்தை வளர்ச்சி மற்றும் கற்றல் மையமாக’’’’ 2014ம் ஆண்டில் மாறிய பிறகு தமிழகத்தில் உள்ள 54 ஆயிரத்து 439 மையங்களில், குழந்தைகளுக்கு காய்ச்சல் கண்காணிப்பு, முதலுதவி  சிகிச்சை, மருத்துவ வசதியை மேம்படுத்தும் பல பணிகளை அவர்கள் செய்ய வேண்டும்.

ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல அங்கன்வாடி மையங்கள் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதனால், கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர், தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் விட்டுவிட்டு, குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு அரசு, செல்போன் வழங்கியுள்ள நிலையில், தினமும் பணியின் போது குழந்தைகளுடன் இருக்கும் ‘’செல்பி’’ மற்றும் பணிகளின் ஆய்வு மற்றும் பெற்றோர் கூட்டம்  ஆகியவற்றின் புகைப்படங்களை, குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப வேண்டும் என விதி உள்ளது.  இதை அங்கன்வாடி பணியாளர்கள் கடைபிடிப்பதில்லை என பெற்றோர் கூறுகின்றனர்.  எனவே, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் அங்கன்வாடி மையங்களை திறக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Anganwadi ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்