×

பழவேற்காட்டில் 40 ஆண்டுகளாக சிகிச்சை அளித்த சென்னையை சேர்ந்த போலி டாக்டர் கைது: பள்ளிப்பட்டில் தம்பதி பிடிபட்டனர்

சென்னை: பழவேற்காடு பகுதி லைட் ஹவுஸ், கோட்டைக்குப்பம், பழவேற்காடு, தாங்கல் பெரும்புலம், அவிரிவாக்கம், கடப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டு காலமாக ஒரு சில நபர்கள் டாக்டர்கள் என சொல்லிக்கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். தற்போது, டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுவதால் அரசு தரப்பில் காய்ச்சலுக்காக வருபவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் சிகிச்சை முறைகளையும் கையாளும்படி ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், மருத்துவர்கள் என்று சொல்லிக்கொண்டு சிகிச்சை அளிக்கும் சிலர் இதனை கருத்தில் கொள்வதில்லை. எனவே, நோயாளிகள் மர்ம காய்ச்சலுக்கும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கும் ஆளாகி உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மாவட்ட சுகாதாரத்துறை மூலம் எம்பிபிஎஸ் படிக்காமல் கிளினிக் வைத்து நடத்தி வரும் போலி டாக்டர்களை கைது செய்து வருகிறது.

அதன்பேரில், பழவேற்காட்டில் 40 ஆண்டு காலமாக சக்தி கிளினிக் என்ற பெயரில் கிளினிக் நடத்தி மருத்துவர் என்று பொதுமக்களை ஏமாற்றிய சென்னை எர்ணாவூர் பாரதி நகரைச் சேர்ந்த பாண்டியன் மகன் பழனிச்சாமி என்பவரை மாவட்ட சுகாதாரத் துறையினர் திருப்பாலை வனம் காவல்துறையனருடன் சென்று கைது செய்தனர். பள்ளிப்பட்டு:  திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களில் தீவிரமாக பரவிய மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலில் 5 பேர் இறந்தனர். இந்நிலையில் போலி டாக்டர்களை அடையாளம் கண்டு கைது செய்யுமாறு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தியுள்ளார். அவரது அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் தயாளன் தலைமையில் போலி டாக்டர்களை கண்டு பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தலைமை மருத்துவ அலுவலர் காவலன் தலைமையில் நேற்று மருத்துவ குழு பள்ளிப்பட்டு நகரி சாலையில் சோதனை செய்தனர்.

அப்போது கிளினிக் நடத்தி வந்த முரளி (42), அவரது மனைவி கிராந்தி (35) ஆகியோரிடம் விசாரித்தனர். இதில் முரளி 10ம் வகுப்பு வரை படித்ததும், கிராந்தி பட்டதாரி எனவும் தெரிய வந்தது. இதையடுத்து அங்கு இருந்த மருந்து மற்றும் மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இருவரையும் பிடித்து பள்ளிப்பட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பள்ளிப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் தனஞ்செழியன் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் நேற்று பள்ளிப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Chennai ,doctor ,
× RELATED சென்னை மருத்துவருக்கு எதிராக லுக்...