×

வெங்காயம் பதுக்கலை தடுக்க கடை, குடோன்களில் அதிகாரிகள் ஆய்வு: பதுக்கினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

பெரம்பூர் : தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதை பயன்படுத்தி, வெங்காயத்தை பதுக்கி வைத்து விலை உயர்வை ஏற்படுத்தி கள்ள சந்தையில் வெங்காயம் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது. அதன்பேரில், பெரம்பூர் மண்டலம் பகுதியில் வெங்காயத்தை பதுக்கி வைத்துள்ளார்களா என்பதை அறிய அதிகாரிகள் சார்பில், கள ஆய்வு நடத்தப்பட்டது. இதில், பெரம்பூர், நெல்வயல் சாலையில் உள்ள காய்கறி அங்காடிகள், மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள பல்பொருள் அங்காடி, வியாசர்பாடி மார்கெட், சர்மா நகர் மார்க்கெட், எருக்கசேரியில் உள்ள மொத்தவிலை கடைகள், பெரம்பூரை சுற்றியுள்ள சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் என ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், சில்லறைக் கடைகளில் 10 ஆயிரம் கிலோவும், மொத்த வியாபாரக் கடைகளில் 50 ஆயிரம் கிலோவும் வெங்காயம் இருக்கலாம் என அரசு நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அதற்குமேல் யாரேனும் வைத்துள்ளார்களா என கண்காணிக்கப்பட்டது. அதிகாரிகள் வருவதை சில வியாபாரிகள் முன்கூட்டியே அறிந்து வெங்காயத்தை பதுக்கியதாகவும் கூறப்படுகிறது. எனினும் குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் வெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வு பணியில் பெரம்பூர் மண்டல உதவி ஆணையர் ஷேக் அப்துல் காதர் தலைமையில் கள கண்காணிப்பாளர்கள் சேகர், முத்துலட்சுமி குமரவேல் ஆகியோர் முன்னிலையில் குடிமைப்பொருள் வழங்கல் ஊழியர்கள் பலர் இதில் ஈடுபட்டனர்.

Tags : shop ,
× RELATED மது பாட்டில்களை மொத்த விற்பனை...