×

விமான கழிவறையில் 2.24 கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல்: கடத்தல் கும்பலுக்கு வலை

சென்னை : துபாயில் இருந்து ஏர்இண்டியா விமானம் நேற்று காலை 5 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் விமான நிலையத்தை விட்டு கீழே இறங்கி சென்றுவிட்டனர். அந்த விமானம் 6.10 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு உள்நாட்டு விமானமாக புறப்பட இருந்தது. அதற்கு முன்னதாக அந்த விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஏர்இண்டியா விமான ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது விமானத்தின் கழிவறையில் உள்ள தண்ணீர் தொட்டியை திறந்து சுத்தப்படுத்தினர். அதில் கருப்பு பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றப்பட்ட நான்கு பண்டல்கள் இருந்தன.இதுகுறித்து விமான ஊழியர்கள், தங்களது சூபர்வைசருக்கு தகவல் கொடுத்தனர். அவர், இதுகுறித்து விமான நிலைய மேலாளருக்கு பாதுகாப்பு அதிகாரிக்கு தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்தபோது 4 கருப்பு பிளாஸ்டிக் பார்சலில் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. ஒவ்வொரு பார்சலிலும் தலா 12 தங்க கட்டிகள் வீதம் மொத்தம் 48 தங்க கட்டிகள் இருந்தன.

அதன் மொத்த எடை 5.6 கிலோ. அதன் சர்வதேச மதிப்பு 2 கோடியே 24 லட்சம், விமான நிலைய அதிகாரிகள் சென்னை விமான நிலைய சுங்க அதிகரிகளுக்கு விரைந்து வந்து தங்க தங்கக் கட்டிகளை கைப்பற்றினர். விசாரணையில், சர்வதேச தங்க கடத்தல் கும்பல் துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் நேற்று அதிகாலை சுங்கசோதனை மிக கடுமையாக இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தங்கக்கட்டிகளை விமான கழிவறையில் விட்டுள்ளனர். மேலும் இதே விமானம் மீண்டும் சென்னையில் இருந்து டெல்லி செல்வதை அறிந்து கடத்தல் ஆசாமி யாராவது இதே விமானத்தில் ஏறி அந்த தங்க கட்டிகளை எடுத்துக் கொண்டு டெல்லியில் உள் நாட்டு பயணியாக கடத்த திட்டமிட்டிருக்கலாம் எனத் தெரியவந்தது.

Tags :
× RELATED சென்னை விமான நிலைய கழிவறையில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்