×

தலைமை ஆசிரியரை பொய் வழக்கில் கைது செய்த இன்ஸ்பெக்டர்களுக்கு 3 லட்சம் அபராதம்: மனித உரிமை ஆணையம் அதிரடி

சென்னை : நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா பள்ளிகொண்டான் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெள்ளத்துரை. இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த 2014ம் ஆண்டு எனது மகன், மருமகள் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, எங்களை நாங்குநேரி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த நாககுமாரி அழைத்தார். விசாரணையின் போது நாங்குநேரி இன்ஸ்பெக்டராக இருந்த சுந்தரநேசன், ஜீப் டிரைவர் ரமேஷ் ஆகியோர் சிலருடன் சேர்ந்து கொண்டு எனது சட்டையை பிடித்து தள்ளினர். மேலும், எனது மனைவியை பிடித்து இழுத்து கீழே தள்ளினர். எனது மகனை தாக்கினர். பின்னர், எங்கள் மீது நாங்குநேரி போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்து என்னையும், எனது மனைவி, மகன் ஆகியோரையும் கைது செய்தனர். திருமண விவகாரம் தொடர்பான பிரச்னையை கையாளும் போது என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விதித்த வழிமுறைகளை பின்பற்றாமல் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி துரை ஜெயச்சந்திரன், முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரர், அவரது மனைவி, மகன் ஆகியோர் கைது விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழிமுறைகளை போலீசார் முறையாக பின்பற்றவில்லை. இதன்மூலம் இன்ஸ்பெக்டர்கள் நாககுமாரி, சுந்தரநேசன் உள்பட மூன்று பேரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் 3 பேருக்கும் ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதாரர், அவரது மனைவி, மகன் ஆகியோருக்கு தலா 1 லட்சம் வீதம் தமிழக அரசு 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும். இந்த தொகையை அரசு, இன்ஸ்பெக்டர்கள் மூன்று பேரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம். இன்ஸ்பெக்டர் நாககுமாரி, டிரைவர் ரமேஷ் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Inspectors ,headmaster ,
× RELATED மாநிலம் முழுவதும் 57 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு