×

திருச்சுழி அருகே உள்ள கல்குவாரியால் விவசாய நிலங்கள் பாதிப்பதாக விவசாயிகள் புகார்

திருச்சுழி, நவ.5:திருச்சுழி அருகே கல்குவாரியால் விவசாய நிலங்கள் பாதிப்பதாக கனிம வள அதிகாரிகளுக்கு விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.திருச்சுழி அருகே காளையார் கரிசல்குளம் கிராமம் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமங்களில் உள்ள அனைவரும் விவசாயத்தையே நம்பியுள்ளனர். இந்நிலையில் காளையார் கரிசல்குளம் பகுதியில் கல்குவாரிகள் உள்ளன. தினமும் இங்கு வெடி வைத்து கற்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அதிபயங்கரமான வெடிகள் வெடிப்பதாலும், முன்னறிவிப்பின்றி சில சமயங்களில் வெடி வைப்பதாலும், வீடுகள் அதிர்வதோடு, சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அதிர்வு கண்டு அச்சப்படுகின்ற நிலை ஏற்படுகிறது. மேலும் அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட கூடுதலாக தோண்டி பாறைகளை பிளப்பதாலும் குவாரியை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாதிப்பு அடைந்தும், விவசாய கிணறுகளில் தண்ணீரின்றி நிலங்கள் தரிசாக போட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி நீர் ஓடைகளை அடைத்து பாதை அமைத்தும், குவாரியின் கழிவுகளை சுண்டக்கோட்டை கண்மாயில் கொட்டுவதாகவும், தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் வந்து செல்வதால் தூசி கிளம்பி மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுவதாகவும், வெடி வெடிப்பதால் வீடுகளின் சுவர்கள் விரிசல் அடைந்து உள்ளதாகவும், கனிம வளத்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் காளையார் கரிசல்குளத்தை சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் புகார் அனுப்பியுள்ளனர். இது சம்மந்தமாக  அரசு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும்  நடவடிக்கை இல்லை என கிராம மக்கள் கூறுகின்றனர்.

Tags : farmland ,Tiruchi ,Kalquari ,
× RELATED திருச்சி துவாக்குடி கனரா வங்கியில்...