×

சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாததால் ஓடையை கடந்து பிணத்தை தூக்கிச் செல்லும் அவலம்

பேரையூர், நவ. 5: பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியம், அதிகாரிபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது எ.கிருஷ்ணாபுரம். அதிகாரிபட்டி ஊராட்சிக்கு உட்பட்டு அதிகாரிபட்டி, வாகைக்குளம், ஆவல்சேரி, எ.கிருஷ்ணாபுரம், உள்ளிட்ட நான்கு கிராமங்கள் உள்ளன. அதில் எ.கிருஷ்ணாபுரத்தில் மட்டும் சுடுகாட்டிற்கு சாலை வசதி கிடையாது, இதுவரை ஊராட்சியிலிருந்து இந்த சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் மண்சாலை கூட அமைத்தது கிடையாது. மேலும் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் ஓடை உள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீருக்குள் இறங்கிதான் பிணத்தை சுமந்து செல்ல முடியும். இதில் பாலம் அமைத்துதரச்சொல்லி இந்த கிராமமக்கள் யூனியன் ஆணையாளர் முதல் மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ.வரை புகார் கொடுத்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இப்பகுதியில் பெண்களுக்கு கட்டப்பட்ட கழிப்பறை தண்ணீர் வசதியில்லாமலும், அதில் பொருத்தப்பட்ட மின்மோட்டார்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டது. இதனால் ஊராட்சி நிர்வாகம் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் திறந்த வெளியில் மலம் கழிப்பதாலும், குப்பைகளை கொட்டி வைப்பதாலும், பிணத்தை சுடுகாட்டிற்கு கொண்டுசெல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். குப்பை கொட்டும் வண்டியை மட்டுமே நிறுத்தியுள்ளது, அதனை அப்புறப்படுத்தவில்லை இந்த ஊராட்சி நிர்வாகம், தூய்மை இந்தியா திட்டம் இந்த கிராமத்தில் ஏட்டளவிலேயே உள்ளது என இக்கிராமப்பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இந்த நிலை தொடரும் பட்சத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சேடபட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபடுவோம் எனத்
தெரிவித்தனர். இது குறித்து இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி கூறும்போது, சுடுகாட்டிற்கு பல ஆண்டுகளாக சாலை வசதியில்லாமல் முட்களிலிலும், சேறும், சகதியுமாக, ஓடைக்குள், பிணத்தை சுமந்து சென்றுதான் அடக்கம் செய்து வருகிறோம். இது சம்மந்தமாக பல முறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் எந்தவொரு அடிப்படை வசதியும் செய்துதரவில்லை.  இதனால் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு