×

மதுரையில் இருந்து செங்கோட்டை வழித்தடத்தில் கோயில் நகரங்களை இணைக்கும் வகையில் பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தல்

சிவகாசி, நவ.5:மதுரையில் இருந்து செங்கோட்டை வழித்தடத்தில் உள்ள சிறிய கோயில் நகரங்களை இணைக்கும் வகையில் கூடுதலாக பயணிகள் ரயில் சேவை துவக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர்-செங்கோட்டை ரயில் தடம் மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது விருதுநகர்-மானாமதுரை, மானாமதுரை-விருதுநகர் ரயில் இயக்கப்பட்டது. அகல ரயில் பாதையாக மாற்றிய பிறகு இந்த ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் செங்கோட்டை-புனலூர் வழியாக அதிகளவில் செல்கிறார்கள். ஆனால் இந்த வழித்தடத்தில் சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. விருதுநகர், சிவகாசி மார்க்கமாக கொல்லத்திற்கு ஒரு பாசஞ்சர் ரயில்கூட இயக்கவில்லை. எனவே விருதுநகரில் இருந்து கொல்லம் வழித்தடத்தில் உள்ள கோயில் நகரங்களான திருத்தங்கல், திருவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, ஆரியங்காவு, புனலூர், சபரிமலை கோயில் நகரங்களை இணைக்கும் வகையில் பு திய பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் ராமேஸ்வரம்-மதுரை வரை இயக்கப்படும் பயணிகள் ரயிலை இரவு மதுரையில் இருந்து விருதுநகர், செங்கோட்டை மார்க்கமாக கொல்லம் வரை நீட்டிப்புசெய்ய வேண்டும். மறு மார்க்கமாக இரவு நேரத்தில் கொல்லத்தில் இருந்து புறப்பட்டு இதே வழித்தடத்தில் இயக்கிட வேண்டும். இதன் மூலம் ஏராளமான பயணிகள், பக்தர்கள் பெரிதும் பயன்பெறுவர். திருச்சியில் இருந்து காரைக்குடி வழியாக விருதுநகர் வரை தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பயணிகள் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும். இந்த ரயிலை மறுமார்க்கமாக அதே வழித்தடத்தில் இயக்கிட வேண்டும். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரயில்வே நிர்வாகம் அறிவித்த அந்தியோதயா ரயில் தாம்பரம்-செங்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை இயக்கப்படவில்லை. இந்த ரயிலை உடனடியாக இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஏழை, எளிய பயணிகளுக்கு பெரிதும் பயன் தரும். செங்கோட்டை வழித்தடத்தில் கூடுதல் ரயில் சேவைகளை இயக்கிட உடனடி நடவடிக்கை எடுக்க ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : temple towns ,Madurai ,Sengottai ,
× RELATED வடமதுரை ரயில் நிலையம் வந்த செங்கோட்டை-...