×

தட்கல் முறையில் மின் இணைப்பு: விவசாயிகள் கலெக்டரிடம் மனு

கிருஷ்ணகிரி.நவ.5: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தட்கல் முறையில் விவசாய மின்இணைப்பு பெற வங்கி வரைவோலை எடுத்தவர்களுக்கு, மின் இணைப்பு வழங்க விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி, சூளகிரி, நெக்குந்தி, வேப்பனப்பள்ளி, குரியனப்பள்ளி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் மூலம் கடந்த 1.4.2000ம் ஆண்டு முதல் 31.3.2010ம் வரை விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பம் செய்தவர்களில் முதல் பிரிவில், கடந்த மாதம் தேதி முதல் 15ம் தேதி தட்கல் முறையில் வங்கி வரைவோலை (டி.டி.) பணம் செலுத்தலாம் எனவும், இதே கால கட்டத்தில் 2ம் பிரிவில் விண்ணப்பம் செய்தவர்கள் கடந்த மாதம் 16ம் தேதி முதல் 31ம்தேதி வரை வங்கி வரைவோலை மூலம் பணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் நகைகளை அடமானம் வைத்து, நிலத்தை அடமானம் வைத்து 5 எச்.பி மின் இணைப்புக்கு ₹2.50 லட்சமும், 7.5 எச்.பி மின் இணைப்புக்கு ₹2.75 லட்சமும், 10 எச்.பி. மின் இணைப்புக்கு ₹3 லட்சமும், 15 எச்.பி. மின் இணைப்புக்கு ₹4 லட்சத்திற்கு வங்கி வரைவோலை எடுத்தோம். உரிய விண்ணப்பம் மற்றும் வங்கி வரைவோலையுடன் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகிய போது, 16ம் தேதி அன்றைய தினமே மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின் இணைப்புக்கான விண்ணப்பங்கள் விவசாயிகள் பெற்று விட்டதாக தெரிவித்தனர். மேலும், 31ம் தேதி வரை வேறு மாவட்டத்தில் ஒதுக்கீடு பெற்ற மின்இணைப்புகளை வாங்கி தருவதாக தெரிவித்த மின் வாரியத்தினர் கடந்த 31ம் தேதி அடுத்த வருடம்தான் மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவித்தனர்.
இதனால் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 நாட்களாக மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இணைப்பு கேட்டு சென்ற விவசாயிகள் அலைகழிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் உரிய விண்ணப்பங்கள் வரபெற்ற தகவலை தெரிவிக்காமல், விவசாயிகளை ஏமாற்றி உள்ளனர்.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மின் இணைப்பு பெற வங்கி வரைவோலை எடுத்தவர்களுக்கு, மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சாக்கனிடம் கேட்ட போது கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 700 மின் இணைப்புகள் வழங்க ஒதுக்கீடு பெற்றபட்டது.விண்ணப்பம் பெற்ற முதல் நாளில் கூட்டம் அதிகரித்திருந்ததால், மேலும், 700 மின் இணைப்புகள் கூடுதலாக கேட்டு பெற்று 1400 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. வருகிற மார்ச் மாதம் மின் இணைப்பிற்கான ஒதுக்கீடு பெறப்பட்டு விடுப்பட்ட விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்