×

விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண்மை கருவிகள்

கிருஷ்ணகிரி,நவ.5: வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண்மை எந்திரங்கள், கருவிகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்குவதாக கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, குறித்த காலத்தில் பண்ணைப்பயிர் சாகுபடி செய்திட ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர லாபத்தினை உயர்த்திடவும் வேளாண்மை எந்திரமயமாக்கும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் மானிய விலையில் வழங்க ₹5.20 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.

விவசாயிகளுக்கு அதிக விலை உள்ள வேளாண் எந்திரங்கள் குறைந்த வாடகைக்கு கிடைக்கும் வகையில், முன்னோடி விவசாயிகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு ₹25 லட்சம் மதிப்புடைய வாடகை மையங்கள் அமைக்க 40 சதவீதம் அல்லது அதிகபட்சமான ₹10 லட்சம் மானியமாக வழங்கப்படும். மொத்த மானியத் தொகையில் பொதுப்பிரிவினருக்கு ₹5 லட்சமும், ஆதி திராவிட பிரிவினருக்கு ₹3 லட்சமும் பிடித்தம் செய்து, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மானிய இருப்பு நிதிக் கணக்கில் ஒப்பந்த காலமான 2 வருடங்களுக்கு இருப்பில் வைக்கப்படும்.  மீதித் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இரண்டு வருடங்களுக்குப் பின் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வேளாண் எந்திரங்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சரிபார்த்த பிறகு மானிய இருப்புத் தொகை திரும்ப வழங்கப்படும். வேளாண் எந்திரமயமாக்கும் திட்டத்தில்  5 வாடகை மையங்கள் அமைக்க  ₹50 லட்சம் மானியம், நமது மாவட்டத்திற்கு  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர்  சிவகுமார் மற்றும் ஒசூர் உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் மோகன் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தையும், உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்