×

ஊராட்சி அலுவலகம் பெயரை மாற்றம் செய்யக்கோரி மனு

தர்மபுரி, நவ.5: தர்மபுரி அருகே பங்குநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் பெயரை, சின்ன பங்குநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் என பெயர் மாற்றம் செய்ய கோரி, கிராம மக்கள் நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தர்மபுரி மாவட்டம் சின்னபங்குநத்தம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட இண்டூர் அருகே சின்னபங்குநத்தம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம், கடந்த 50 ஆண்டுளாக இயங்கி வருகிறது. இந்த ஊராட்சிக்குட்பட்டு சின்னபங்குநத்தம், ராஜாகொல்லஅள்ளி, திப்பட்டி, மாக்கன்கொட்டாய், சின்னையனூர், குஞ்சான்கொட்டாய், கவுண்டன் கொட்டாய் ஆகிய 7 கிராமங்கள் உள்ளன. ஆனால் சின்ன பங்குநத்தம் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், பங்குநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. பங்குநத்தம் என்ற ஊர், பண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்டதாகும். எனவே எங்கள் ஊரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் பங்குநத்தம் என்ற பெயரில் இயங்குவதால், எங்கள் ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் அனைத்து அரசு கட்டிடங்களும் குறிப்பாக கால்நடை மருத்துவமனை, வேளாண்மை கூட்டுறவு சங்கம், விஏஓ அலுவலகம், வறுமை ஒழிப்பு சங்க கட்டிடம், துணை சுகாதார நிலையம் என அனைத்து அரசு கட்டிடங்களும் எங்கள் ஊராட்சிக்குள் அமைக்கப்படவில்லை.

எனவே எங்கள் ஊரில் உள்ள பங்கு நத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் பெயரை, சின்னபங்குநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் என பெயர் மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட குமாரசாமிபேட்டை அடுத்த அண்ணாநகரை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று தர்மபுரி கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட குமாரசாமிபேட்டை அடுத்த அண்ணாநகர் பகுதியில், 100க்கும் மேற்பட்டவர்கள் வாடகை வீட்டில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். கூலி வேலை செய்து வரும் எங்களால், சொந்த வீடு கட்டுவதோ, விலைக்கு வாங்குவதோ இயலாதது. எனவே அண்ணாநகரில் வசிக்கும் எங்களுக்கு சொந்த வீடு மனை வழங்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Panchayat Office ,
× RELATED கீழ வெள்ளகால் ஊராட்சி அலுவலக புதிய...