×

மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

போச்சம்பள்ளி, நவ.5: போச்சம்பள்ளி அருகே கூச்சனூர் சாலையில் புளிய மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியிலிருந்து புளியம்பட்டி, சந்தூர் வழியாக காவேரிப்பட்டிணம், கிருஷ்ணகிரிக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இதில் முக்கிய சாலையாக சந்தூர் இருந்து வருகிறது. அதிகம் விவசாயிகள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்ல இந்த சாலை வழியை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் சந்தூர் கூட்ரோடு வரை சாலை குறுகியதாகவும், சாலையோரத்தில் பழமையான புளியமரங்கள் காணப்படுகிறது. இதில் சில மரங்கள் முறிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இது குறித்து நெடுஞ்சாலை துறையினரிடம் தெரிவித்து முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் அதிகாரிகள் தரப்பில் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்தனர். மேலும் குறுகிய சாலை என்பதால், அடிக்கடி விபத்துக்கள் நடப்பது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் நேற்று காலை கூச்சனூர் பகுதியில் சாலையோரத்தில் உள்ள புளியமரம் ஒன்று முறிந்து மெயின் சாலையில் விழுந்தது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள், பஸ்கள் கூச்சனூர் வழியாக வலசகவுண்டனூர், புளியம்பட்டி, முல்லைநகர் வழியாக 3 கிமீ தூரம் சுற்றி வந்தது.
இதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags : Tree breakdown ,
× RELATED ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தையில்...