×

முட்டை விலை ஒரே நாளில் 17 காசுகள் குறைப்பு

நாமக்கல், நவ.5: நாமக்கல் மண்டலத்தில் நேற்று முட்டை விலையில் 17 காசுகளை என்இசிசி(தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு) குறைத்தது. இதையடுத்து, முட்டையின் விலை 387 காசில் இருந்து 370 காசாக நிர்ணயம் செய்து என்இசிசி அறிவித்தது. மைனஸ் இல்லாத முட்டை விலையை கடந்த 1ம் தேதி முதல் அறிவித்து வரும் என்இசிசி தொடர்ந்து முட்டை விலையை குறைத்து வருகிறது. கடந்த 4 நாளில் முட்டை விலையில் 25 காசுகள் வரை குறைக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் குளிர் அதிகரிப்பால் முட்டை விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மற்ற மணடலங்களில் முட்டை விலை குறைக்கப்பட்டு வருவதால் அதன் அடிப்படையில் நாமக்கல் மண்டலத்திலும், என்இசிசி விலையை குறைத்து வருகிறது. என்இசிசியின் விலையை அடிப்படையாக வைத்து தான் தமிழகம் முழுவதும் முட்டை வியாபாரம் நடைபெறுகிறது. எனவே, என்இசிசி விலையை குறைக்காமல் இருந்தால் பண்ணையாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு முட்டை விலையை குறைக்ககூடும் என்பதால் என்இசிசி விலையை குறைத்து அறிவித்து வருகிறது. இதன் காரணமாக முட்டையின் சில்லறை விற்பனை விலை குறையும் என எதிர்பார்க்கப்பபடுகிறது. ஆனால், வழக்கம் போல கடைகளில் ஒரு முட்டை 415 காசு முதல் 425 காசு வரை விற்பனையாகி வருகிறது.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி