×

கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில் தடை மீறி குளியல்

கெங்கவல்லி, நவ.5: கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில் ஆபத்தை உணராமல், தடை மீறி குளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரி கெங்கவல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.  கெங்கவல்லி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. இந்நிலையில், 40 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி நேற்று முன்தினம் நிரம்பியது. ஏரி நிரம்பி 2500 கனஅடி நீர் தடுப்பணை வழியாக ஏரிகால்வாய் வழியாக பாசனத்திற்கு செல்கிறது. இந்த ஏரி நீரில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால், பொதுமக்கள் குளித்து வருகின்றனர். கடந்த ஓராண்டில் ஏரியில் குளித்த 5க்கும் மேற்பட்ட வாலிபர்கள் இறந்தனர். இதையடுத்து, ஏரியில் குளிக்க தடை விதித்து போலீசார், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ஆனால், ஆபத்தை உணராமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏரியில் இறங்கி குளித்து வருகின்றனர். தற்போது, பாசனத்திற்காக தண்ணீர் செல்லும் நிலையில், ஆபத்தை உணராமல் குளித்து வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Valasakalpatti Lake ,Kengeavalli ,
× RELATED விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம்...