×

கோயில் நிலத்தை பட்டா வழங்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்

சேலம், நவ.5:  தமிழகத்தில் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணையை ரத்துசெய்ய வலியுறுத்தி இந்து முன்னணியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், இந்து முன்னணி அமைப்பின் சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில் வந்த 50க்கும் மேற்பட்டோர் மனு ஒன்றை அளித்தனர். அதில், தமிழகத்தில் கோயில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்கவும், தனியாருக்கு விற்பனை செய்யவும் முடிவெடுத்துள்ளது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனவே, இதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தை திரும்ப பெற வேண்டும், என குறிப்பிட்டிருந்தனர்.

இதேபோல், மாநகராட்சியின் 5வது கோட்டம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மனு ஒன்றை அளித்தனர். அவர்கள் கூறுகையில் “5வது கோட்டத்தில் உள்ள முருகன் நகர், ராஜராஜ நகர், நியூ அருண் நகர், கண்ணதாசன் நகர் ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த சில தினங்களாக பெய்த மழையால், அப்பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கால்வாய், சாலை வசதி இல்லாததால் தண்ணீர் வெளியேறவில்லை. தற்போது கொசு உற்பத்தி கூடாரமாக மாறி வருகிறது. எனவே இதனை சீரமைக்க வேண்டும்,” என கோரிக்கை விடுத்தனர்.தலைவாசல் அடுத்த சிறுவாச்சூர் அம்பேத்கார் காலனியைச் சேர்ந்தவர்கள் அளித்த மனுவில்,  எருமைகாரன் ஓடைக்காடு பகுதியில் வசித்து வரும் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கென தனியாக சுடுகாடு ஏதும் இல்லை. இதனால் அப்பகுதியில் யாரேனும் உயிரிழந்தால், எருமைகாரன் ஓடைக்குள் வைத்து தகனம் செய்து வருகிறோம். நேற்று முன்தினம் கூட இருவரது உடல்கள் அவ்வாறு ஓடையில் வைத்து தகனம் செய்யப்பட்டது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே எரியூட்டும் தகனமேடை அமைத்து தர வேண்டும், என தெரிவித்தனர்.

Tags : temple land ,
× RELATED கோயில் நிலம் போலீசாருக்கு வழங்கிய...