×

காய்கறி விலை கிடுகிடு உயர்வால் வாரச்சந்தைகள் வெறிச்சோடிய அவலம்

கடலூர், நவ. 5: மழை மற்றும் ஏற்றுமதிக்கான அனுமதி காரணமாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வாரச்சந்தைகள் வெறிச்சோடியது. விலை உயர்வால்  பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். வியாபாரிகள் விற்பனை சரிவால் திணறி வருகின்றனர். மக்களின் வாழ்வாதாரத்திற்கு உணவு அத்தியாவசிய தேவையாக உள்ளது. உணவு வகைகள் தயாரிப்பதில் காய்கறிகள் முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் மழை மற்றும் மத்திய அரசின் ஏற்றுமதிக்கு அனுமதி காரணமாக கடலூர் மாவட்டத்தில் காய்கறி வரத்து குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாக விலை உயர்வு தொடர்ந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாவட்டத்தில் சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளுக்கு மாற்றாக பழமை வாய்ந்த வாரச்சந்தைகளும் நடைபெற்று வருகிறது. கடலூர் அருகே காராமணிக்குப்பம் மற்றும் பண்ருட்டி, வேப்பூர், விருத்தாசலம், வல்லம்படுகை, குள்ளஞ்சாவடி, வடலூர், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாரச்சந்தைகள் என்பது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பெரிதும் வழிகாட்டியாக அமைந்துள்ளது. இந்நிலையில் காய்கறி விலை உயர்வால் கடலூர் மாவட்டத்தில் நேற்று வாரச்சந்தைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

இதற்கிடையே காய்கறி விலை விண்ணை தொடும் அளவிற்கு விழுந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். கடந்த வாரம் வரை கிலோ ரூபாய் 30க்கு விற்ற வெங்காயம் தற்போது ரூ.50 முதல் ரூபாய் 70க்கு உயர்ந்துள்ளது. இதுபோன்று தக்காளி 25 ரூபாயிலிருந்து 50 ரூபாய்க்கும், கேரட் முப்பதிலிருந்து ஐம்பது ரூபாய்க்கும், பீன்ஸ் ரூபாய் 40லிருந்து ரூ.80க்கும் விற்கப்பட்டது. இதேபோன்று உள்ளூர் சாகுபடி காய்கறிகளான கத்தரிக்காய் கிலோ ரூ.15க்கு விற்றது தற்போது ரூ. 80க்கும், வெண்டைக்காய் ரூ.20க்கு விற்றது தற்போது கிலோ 60 ரூபாய்க்கு விலை ஏற்றம் கண்டுள்ளது. சமையலுக்கு பச்சைமிளகாய், இஞ்சி போன்றவை மிக அத்தியாவசியமான தேவை என்ற நிலையில் அதிலும் விலையேற்றத்தை கண்டு பொதுமக்கள் மிரண்டு உள்ளனர். இஞ்சி கடந்தவாரம்  கிலே ரூ. 50க்கு விற்றது. தற்போது கிலோ ரூ.80க்கும், பச்சைமிளகாய் ரூ.40க்கும் விற்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மழையின் காரணமாக மலைப்பிரதேச காய்கறிகளான கேரட், பீட்ரூட் உள்ளிட்டவைகளின் விலை உயர்ந்துள்ளதாகவும், இதுபோன்று உள்ளூர் காய்கறிகளான கத்தரிக்காய், வெங்காயம் உயர்வு கண்டுள்ளது என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர். ஆனால் வெங்காயம் உள்ளிட்டவைகள் திடீரென இரு மடங்காக விலை ஏற்றம் கண்டுள்ளது முக்கிய காரணமாக ஏற்றுமதிக்கான அனுமதி இடம் பிடித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து காராமணிக்குப்பம் வாரச்சந்தை வியாபாரிகள் கனகவேல் மற்றும் சிவகுமார் கூறுகையில்:

 வழக்கமாக காராமணிக்குப்பம் வாரச்சந்தைக்கு 300 கடைகளில் காய்கறி முதல் பல்வேறு வகையான உணவு பொருட்கள் விற்பனைக்காக அமைக்கப்படும். ஆனால் தற்போது விலை ஏற்றம் காரணமாக 100 கடைகளாக குறைந்துள்ளது. இதுபோன்று நெல்லிக்குப்பம், கடலூர் பகுதியில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 40,000 மக்கள் வாரச்சந்தை வந்து பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். ஆனால் கடைகள் குறைந்ததாலும், விலை ஏற்றத்தால் இது 50 சதவீதம் வரை குறைந்து காணப்படுகிறது. மத்திய அரசின் ஏற்றுமதிக்கான அனுமதியை ரத்துசெய்ய வேண்டும். ஏற்கனவே காய்கறிகள் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 இதன் காரணமாக உள்ளூர் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான விலையில் மாற்றம் ஏற்பட்டு விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை மத்திய அரசு உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும். ஏற்றுமதிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.  மேலும் தற்போது வாரச்சந்தைகளில் வியாபாரிகள் நேரடியாக காய்கறிகளை விற்பனை செய்து வரும் நிலையில் விலையேற்றம் மற்றும் விற்பனை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தைக்கான கடை விற்பனை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

கருவாட்டு வியாபாரிகள் கவலை
தமிழக அளவில் கடலூர் அருகே காராமணிக்குப்பம் வாரச்சந்தை கருவாட்டு விற்பனைக்கு பெயர் பெற்றது. ஆனால் விலை உயர்வு காய்கறி வியாபாரிகள் மட்டுமின்றி கருவாட்டு வியாபாரிகளையும் கலங்க செய்துள்ளது. மழையின் காரணமாக வரத்து குறைந்து கருவாட்டு விற்பனையிலும் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக 200 ரூபாய்க்கு கிலோ நெத்திலி விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.300 ஆக உயர்ந்துள்ளது. இதுபோன்று கவளை கருவாடு ரூ.50லிருந்து 80 ரூபாய்க்கும், வஞ்சிரம் கருவாடு ரூ.400லிருந்து 600க்கும், இதர வகை கருவாடுகள் 40 சதவீதம் வரை விலை உயர்வை எட்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விற்பனையும் மந்தநிலையில் உள்ளது.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது