×

டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

கடலூர், நவ. 5:  கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தொகுதி மற்றும் இதர பிரசனைகள் தொடர்பாக மனு வழங்குவதற்கு பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் வந்திருந்தனர்.  கடலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமையில் குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் மனு கொடுப்பதற்காக வந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனைவரையும் அனுமதிக்க முடியாது என சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தெரிவித்தனர். மேலும் 5 பேர் மட்டுமே அனுமதிக்க முடியும் எனவும் கூறினர். இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஆட்சியரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை ஆட்சியரை சந்திக்க அனுமதித்தனர். பின்னர் கோரிக்கை மனுவை ஆட்சியர் அன்புச்செல்வனிடம் பொதுமக்கள் வழங்கினர். மனுவில் கூறியிருப்பதாவது:  குறிஞ்சிப்பாடி அடுத்த குள்ளஞ்சாவடி, ஆலப்பாக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு மது குடிக்க வருபவர்கள் மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களும் பாதிப்படைகின்றனர். டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நலனுக்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Darna ,office ,Collector ,task shop ,
× RELATED 2.5 கிலோ நகை அணிந்து வந்த கர்நாடக...