×

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தம்பதி போராட்டம்

விழுப்புரம்,  நவ. 5: ஆவின் பாலகம் அமைக்க அனுமதிக்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு  மாற்றுத்திறனாளி தம்பதியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது.விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர  பொதுமக்கள் குறைகேட்புக்கூட்டம் நடந்தது. ஆட்சியர் சுப்ரமணியன் மற்றும்  அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை வாங்கினார்கள். ஒருமாத கால  இடைவெளிக்கு பிறகு குறைகேட்புக்கூட்டம் நடந்ததால் நேற்று ஏராளமான  பொதுமக்கள் மனு கொடுக்க வந்திருந்தனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளி  தம்பி, தங்களது பெண் குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்தில் அவரது கார் முன்பு  அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். பாதுகாப்பு பணியிலிருந்த  போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி  அருகே சக்கராபுரம் மண்டப தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி  உமாமகேஸ்வரி. இருவரும் மாற்றுத்திறனாளி என்பது தெரியவந்தது.

பின்னர்  ரமேஷ் போலீசாரிடம் கூறுகையில், நாங்கள் செஞ்சிப்பகுதியில் ஆவின்பாலகம்  அமைப்பதற்காக ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அவர் வாய்மொழி  உத்தரவிட்டதன் பேரில் ஆவின்பாலகம் அமைக்க சான்றிதழ் கொடுத்தார்கள். அந்த  சான்றிதழில் சரியானஇடத்தை குறிப்பிடவில்லை. செஞ்சி நகரில் விழுப்புரம்  செல்லும் சாலை நிழற்குடை அருகே வைத்துக்கொள்ளுமாறு சொன்னார்கள். ஆனால் அங்குள்ள ஆட்டோஓட்டுநர்கள் சிலர் ஆவின்பாலகம் வைக்கவிடாமல்  எதிர்ப்புதெரிவித்து வருகிறார்கள். மாற்றுத்திறனாளியாகிய எங்களால்  உடலுழைப்பு செய்து பிழைக்க முடியாது. இந்த ஆவின் பாலகம் மூலம் குடும்பத்தை  நடத்தலாம் என்றால் அதற்கும் வழியில்லை. இதனால் மனமுடைந்து ஆட்சியர்  அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். பின்னர் போலீசார்  அறிவுரையின் பேரில் ஆட்சியரிடம் மனு கொடுத்து விட்டு சென்றனர்.

Tags : Viluppuram Collector ,Office ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்