டெல்லி தாக்குதலை கண்டித்து புதுவையில் வழக்கறிஞர்கள் ஸ்டிரைக்

புதுச்சேரி, நவ. 5: டெல்லி தாக்குதலை கண்டித்து புதுவையில் வழக்கறிஞர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 16 நீதிமன்றங்களில் விசாரணை பணிகள் பாதிக்கப்பட்டன. டெல்லியில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களை அத்துமீறி தாக்கியதோடு துப்பாக்கி சூடு நடத்திய டெல்லி போலீசாரை கண்டித்து தமிழகம், புதுச்சேரியில் பார் கவுன்சில் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் பெரும்பாலான நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பணிக்கு செல்லாமல் புறக்கணித்தனர். இதேபோல் புதுச்சேரியிலும் வழக்கறிஞர்கள் பணிக்கு செல்லாமல் கருப்பு பேட்ஜ் அணிந்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். சங்கத் தலைவர் முத்துவேல், பொதுச்செயலாளர் தாமோதரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இதனால் 16 நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. நிலுவை வழக்குகளின் விசாரணைக்கு ஆஜராக வந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். போராட்டம் குறித்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கூறுகையில், டெல்லியில் வழக்கறிஞர்கள் மீது அம்மாநில போலீஸ் அத்துமீறி தாக்குதல் நடத்தியதை ஏற்க முடியாது. அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டார்.

Tags : Protests ,New Delhi ,attack ,
× RELATED பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்