×

ஆளும் அரசுக்கு எதிராக விரைவில் போராட்டம் என்ஆர் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்

புதுச்சேரி, நவ. 5: புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் மீண்டும் ஆட்சிஅமைக்கும் என அக்கட்சி தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி தெரிவித்தார்.புதுச்சேரியில் நடந்து முடிந்த காமராஜர் நகர் இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டுமென ரங்கசாமி முனைப்பு காட்டினார். ஆனால் அது ஏமாற்றத்தில் முடிந்தது. அதேபோல் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலிலும் என்.ஆர்.காங்கிரசுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தொடர் தோல்விகளால் அக்கட்சி தொண்டர்கள் சோர்ந்து போயுள்ளனர். மேலும் என்.ஆர்.காங்கிரசின் கதை முடிந்து விட்டதாக முதல்வர் நாராயணசாமி கூறியிருந்தார்.இந்நிலையில்  இந்திராநகர் தொகுதியில் காமராஜ் நகர் இளைஞர் மற்றும் மகளிர் நலச்சங்கத்தை  என்.ஆர்.காங்கிரஸ்தலைவர் ரங்கசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
 தொகுதி மக்களை அடிக்கடி என்னால் சந்திக்க முடியவில்லை. இதற்கு கட்சி துவங்கிய குறுகிய காலத்தில் ஆட்சியை  பிடித்ததே காரணம். தொகுதிக்கு மட்டும் எம்எல்ஏவாக இருந்தபோது, அடிக்கடி உங்களை சந்தித்தேன். மாநிலம் முழுவதுக்குமான பொறுப்பு வந்ததால், காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளுக்கு செல்ல வேண்டியிருக்கிறது.

இன்றும் மற்ற பிராந்தியங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன்.இதன்மூலம் என்.ஆர்.காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும். நேரமில்லாததே உங்களை சந்திக்க முடியாததற்கு காரணம். ஒரு தொகுதிக்கு மட்டும்தான் செய்கிறேன் என ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டுவார்கள். இந்த தொகுதி அதிக குடிசை வீடுகள் நிறைந்திருந்தது.நாங்கள் கொண்டு வந்த காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் இருந்த குடிசைகள், கட்டிடங்களாக மாறியது. புதுச்சேரியில் 90 சதவீதம் குடிசைகள் கல்வீடுகளாக மாறிவிட்டது. வயதான பெற்றோரை குழந்தைகள் கைவிட்டு விடுகின்றனர். அவர்களை கண்டுகொள்வதில்லை என்ற குறை இருந்தது. இதனால்தான் முதியோர் பென்ஷன் தொகையை அதிகரித்தேன். இன்று ரூ.3 ஆயிரம் வரை முதியோர் பென்ஷன் பெறுகின்றனர்.குழந்தைகள் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு நல்ல முறையில் கவனிக்கின்றனர். இலவச அரிசிதிட்டம், ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களை கொண்டு வந்தேன். இதுபோல் ஒரே ஒரு திட்டத்தையாவது இந்த அரசு செயல்படுத்தியிருக்கிறதா? என ஒரு நிமிடம் யோசித்து பார்க்க வேண்டும். முதியோர் பென்ஷன் ஒரு ரூபாயாவது உயர்த்தினார்களா? மக்களுக்கான எனது பணி என்றென்றும் தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார். இதைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரங்கசாமி பரிசுகளை வழங்கினார். விரைவில் போராட்டம்: இதனிடையே வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் களத்தில் தீவிரமாக இயங்க  ரங்கசாமி முடிவெடுத்துள்ளார். தோல்விக்கு பிறகு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, இன்னும் ஒரு ஆண்டுகாலத்தில் சட்டப்பேரவைக்கு தேர்தல் வந்துவிடும். எனவே இப்போது இருந்தே அரசுக்கு எதிரான பிரசாரங்களை துவங்க வேண்டும். கடந்த காலங்களை போலவே அமைதியாக இருந்தால் சரிபடாது. தேர்தல் நேரத்துக்கு மட்டும்தான் வருவார்கள் என்ற ஆளும் கட்சியின் பிரசாரத்தை ஆமோதிப்பதுபோல் ஆகிவிடும்.
எனவே ஆளும் அரசின் நடவடிக்கைகளை கண்டித்து என்.ஆர்.காங்கிரஸ் தொடர்ந்து  போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இதனை ரங்கசாமியும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், தேர்வு செய்யப்பட்டுள்ள கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பட்டியலை ரங்கசாமி விரைவில் வெளியிடவுள்ளார். பின்னர் பல்வேறு அணிகளின் தலைவர்கள், வார்டு அளவில் நிர்வாகிகள் பட்டியல் என ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் என என்.ஆர்.காங்கிரசார் தெரிவித்துள்ளனர்.

Tags : struggle ,NR Congress ,government ,
× RELATED வாக்காளர்களுக்கு குக்கர் கொடுக்கும் பாஜ வேட்பாளர்: வீடியோ வைரல்