×

புதுவை பிரதான சாலைகளில் ஆபத்தை விளைவிக்கும் பாதாள சாக்கடை மூடிகள்

புதுச்சேரி, நவ. 5: புதுவையில் பிரதான சாலைகளில் உள்ள பாதாள சாக்கடை மூடிகளின் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இதனால் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் அச்சத்துடன் பயணிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி நகரப்பகுதியில் 1980ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் 2014ம் ஆண்டு முதல் ஜவகர்லால் நேரு நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.300 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க முடியாமல் இன்னமும் இழுத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் புதுச்சேரியின் முக்கிய வீதிகளான நேருவீதி, மிஷன் வீதி, ரங்கப்பிள்ளை வீதி, செட்டித்தெரு ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட பாதாள சாக்கடை மூடிகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறது. குறிப்பாக சாலைக்கும், பாதாள சாக்கடை மூடிக்குமான இடைவெளி அதிகரித்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், திடீரென பள்ளத்தில் விழுவதால், விபத்தில் சிக்குகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட பாதாள சாக்கடை மூடிகள், சாலையின் உயரத்துக்கு ஏற்ப இல்லை. தற்போதைய சூழலில் உயரத்தை அதிகரித்து  மீண்டும் பொருத்த வேண்டியது அவசியமாகிறது. சாலைகளின் உயரம் அதிகரித்துவிட்ட போதிலும், பாதாள சாக்கடை குழிகள் மரண பள்ளங்களாக காட்சி தருகின்றன. எனவே பொதுப்பணித்துறையினர் இதனை  ஆய்வு செய்து, சரி செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : roads ,Puthuvai ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...