×

மணல் கடத்தலை தடுப்பதில் மட்டுமே கவனம் வில்லியனூரில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள்

வில்லியனூர், நவ. 5: வில்லியனூர் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் மங்கலம் காவல் நிலையம், கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டில் வில்லியனூர், ஒதியம்பட்டு, அரியூர், கூடப்பாக்கம், ெதாண்டமாநத்தம், பிள்ளையார்குப்பம், மங்கலம்,  உறுவையாறு, கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்ற செயல்களை தடுக்கும் வகையில் போலீசாரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இந்நிலையில் சமீபகாலமாக சங்கராபரணி ஆற்றில் நடக்கும் மணல் கடத்தலை தடுப்பதற்காக வருவாய்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதற்காக போலீசாரின் உதவியை நாடியது. இந்த அதிகாரங்களை கையில் எடுத்துக்கொண்டு போலீஸ் உயரதிகாரிகள் முதல் கடைநிலை காவலர்கள் வரை கல்லா கட்ட துவங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மணல் கொள்ளையர்களிடம் மாமூல் வாங்குவதற்காக போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியை விரும்பி கேட்டு வாங்கி கொள்கிறார்களாம். புதிதாக பொறுப்பேற்றுள்ள சீனியர் எஸ்பி ராகுல் அல்வால்  மணல் கொள்ளையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றார். இதனை நிறைவேற்ற சங்கராபரணி ஆற்றில் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். தற்போது மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி போலீசாரின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கஞ்சா விற்பனை போன்ற குற்ற செயல்களை தடுக்காமல் போலீசார் கோட்டை விட்டுவிட்டனர். இதனால் வில்லியனூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாள்தோறும் கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை, மாமூல் கேட்டு மிரட்டல், அடிதடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கோனேரிக்குப்பம், கூடப்பாக்கம், நடராஜன் நகர், ஜிஎன் பாளையம், கணுவாப்பேட்டை, கரிக்கலாம்பாக்கம், உறுவையாறு உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை தலைவிரித்தாடுகிறது. பங்கூர் பகுதியில் ரூ.3 லட்சம் வழிப்பறி, கரிக்கலாம்பாக்கத்தில் 10 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை, தியேட்டர்களில் பைக் சக்கரம் திருட்டு, நடராஜன் நகரில் கஞ்சா விற்பனை, கரிக்கலாம்பாக்கத்தில் போலீசார் மீது தாக்குதல், உறுவையாறில் சாராயக்கடை சூறை, கூடப்பாக்கத்தில் ரவுடிக்கு கத்திக்குத்து, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றசெயல்கள் கடந்த சில மாதங்களில் நடந்துள்ளது.வில்லியனூர் காவல் நிலையத்தில் கடந்த காலங்களில் 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மட்டுமே பணியாற்றி வருகிறார் தற்போது அவருக்கு காவல் நிலையத்தில் உள்ள பணிகளை செய்வதிலே பாதிநேரம் கடந்து விடுகிறது. மீதமுள்ள நேரத்தில்தான் ரோந்து செல்ல முடிகிறது.  எனவே வில்லியனூர் காவல் நிலையத்திற்கு கூடுதலாக இரண்டு சப்-இன்ஸ்பெக்டரை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Villianur ,
× RELATED வில்லியனூர் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் அடித்து கொலை