×

காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்

காரைக்கால், நவ. 5: ஜம்மு - காஷ்மீரை தொடர்ந்து காரைக்கால் மாவட்டத்தையும்  தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க மத்திய அரசு முன் வரவேண்டும் என காரைக்கால் போராட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக காரைக்கால் மாவட்ட போராட்டக்குழு அமைப்பாளர் வழக்கறிஞர் செல்வசண்முகம்  வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி விடுதலைக்கு பிறகு காரைக்கால் சிறப்பான வளர்ச்சியில் இருந்து வந்தது. அதன்பிறகு வந்த ஆட்சி மாற்றங்கள் காரைக்கால் பிராந்தியத்தை பின்னோக்கி தள்ளிவிட்டது. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக காரைக்கால் தொடர்ந்து புதுச்சேரியை ஆளும் அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல நிலைகளில் காரைக்கால் பின்தங்கியுள்ளது. வளர்ச்சி என்பதே முற்றிலும் இல்லை. பொருளாதார நிலையிலும் பல்வேறு சிக்கல்கள் நீடிக்கின்றன. அரசு நிர்வாகத்தில் காரைக்காலுக்கான பிரதிநிதித்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டு விட்டது. தலைநகரிலிருந்து பல கிலோ மீட்டர் தூரம் தொலைவில் தனிப்பகுதியாக உள்ளது. இதனால் பல்வேறு சிக்கல்களை இங்குள்ள மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, ஜம்மு - காஷ்மீரை போல் காரைக்காலை மத்திய அரசு தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும். நவ.1 ம் தேதிதான் புதுச்சேரி விடுதலை நாள் என போராட்டக்குழு முதன்முதலில் சொன்னபோது அது அலட்சியப்படுத்தப்பட்டதோடு பலரும் கேலியும் செய்தனர். ஆனால் அது பின்னாளில் நிறைவேறியது. அதுபோல காரைக்கால் தனி யூனியன் பிரதேச கோரிக்கையும் நிறைவேறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Karaikal ,Union Territory ,
× RELATED காரைக்காலில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு