×

மழையால் குண்டும், குழியுமான பச்சைமலை சாலை மலைவாழ் மக்கள் அவதி

துறையூர், நவ.5: துறையூர் பச்சமலை சாலை மழையால் பல்லாங்குழிபோல் குண்டும், குழியுமாக மாறியது. இதனால் மலைவாழ் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.துறையூர் அடுத்த பச்சைமலை வண்ணாடு ஊராட்சியில் கடந்த சில நாட்களாக மழைபெய்தது. இந்த மழையால் மணலோடையில் இருந்து தோனூர் செல்லும் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஏற்கனவே சாலைகளை பராமரிக்காததால் பச்சைமலை பல பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகளாகவே உள்ளது. இதனால் வாகனங்கள் குலுங்கி குலுங்கியும், ஊர்ந்தபடியும் சென்று வருகிறது. மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக இருப்பதால் சாலைகள் சரிவர தெரியாததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்பொழுது பச்சைமலையில் பல பகுதிகளில் சாலைகளில் செல்ல முடியாமலும் நிலையில் உள்ளது. இன்னும் சில நாட்களில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை நடைபெற உள்ளது. அப்போது அறுவடை செய்த மரவள்ளிகிழங்கை லாரிகள் மூலம் விற்பனைக்கு கீழே கொண்டு செல்வார்கள். இந்நிலையில் சாலைகள் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை இருப்பதாகவும் கூறுகின்றனர். எனவே தமிழக அரசு பச்சைமலை சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்களும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : greenway road ,mountain people ,
× RELATED சிங்கம்புணரி அருகே மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு முகாம்