×

மண்ணச்சநல்லூரில் தொடர் மின்வெட்டு: மக்கள் அவதி பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு அதிகாரிகள் அலட்சியம்

மண்ணச்சநல்லூர், நவ.5: மண்ணச்சநல்லூரில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து இருந்து வரும் மின்வெட்டால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். அதிகாரிகளின் அலட்சியபோக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூருக்கு மின்சாரம் நெய்வேலியிலிருந்து சமயபுரம் துணை மின்நிலையத்தில் இருந்து பிரிந்து மண்ணச்சநல்லூர் பகுதிக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தினமும் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரங்கள் வரை மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.பகல் இரவு பாராமல் மின்வெட்டு நீடிப்பதால் பொதுமக்களின் அன்றாட பணிகள் முடங்கியுள்ளது. மின்சாரம் தடையால் மாணவ, மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பெண்கள் சமையல் வேலைகளை கூட செய்யமுடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மின்சாரம் இல்லாமல் பல வியாபாரிகள் மாலை 6 மணி ஆனதும் தங்கள் கடைகளை அடைத்து சென்றுவிடுகின்றனர். தொடரும் மின்வெட்டால் மண்ணச்சநல்லூரில் உள்ள 50க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் முடங்கி உள்ளன. இதனால் பல கோடி ரூபாய் வியாபாரம் முடங்கி உள்ளது. அரிசி ஆலைகளை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தையும் இழந்துள்ளனர்.

15 நாட்களுக்கும் மேலாக மின்சாரம் தடைபட்டும் அதிகாரிகளின் அலட்சிபோக்கு தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் தடையின்றி மின்சாரம் கொடுத்து வருவதாகவும், மின்தடை ஏற்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவித்தால் அவர்கள் சில மணி நேரங்களில் அதை சீர் செய்துவிடுவார்கள் என்று துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். ஆனால் மண்ணச்சநல்லூரில் மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூரில் உள்ள மின்மாற்றிகள் பழுதடைந்து உள்ளதாக கூறி 15 நாட்கள் ஆகியும் அதனை அதிகாரிகள் சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. மண்ணச்சநல்லூர் மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் அலட்சியபோக்கு குறித்து அதிருப்தி அடைந்துள்ள பொதுமக்கள் மின்சார வாரிய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பபோவதாக தெரிவித்துள்ளனர்.


Tags : Mannachanallur ,
× RELATED சோழவந்தான், மண்ணச்சநல்லூர் 2 அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி