×

மயானத்திற்கு செல்ல பாதைவசதி கேட்டு சடலத்தை ரோட்டில் வைத்து மறியல் தொட்டியம் அருகே பரபரப்பு

தொட்டியம், நவ.5: தொட்டியம் அருகே எம்.புத்தூர் சத்திரம் கிராம மக்கள் மயானத்திற்கு நிரந்தர பாதை கேட்டு நேற்று இறந்துபோனவரின் சடலத்தை நடுரோட்டில் வைத்து மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள எம்.புத்தூர், சத்திரம் பகுதியை சேர்ந்தவர் தங்கம்மாள் (65). வயது முதிர்வு காரணமாக நேற்று இறந்துபோனார். இதையடுத்து இவரது உறவினர்கள் இவரை அடக்கம் செய்வதற்காக உடலை எடுத்துச் சென்றனர். அப்போது மயானத்திற்கு சடலத்தை எடுத்துச் செல்லும் பாதையில் தனிநபர் ஒருவர் இடையூறு செய்வதாக கூறி தங்கமாள் சடலத்தை தொட்டியத்தில் இருந்து காட்டுப்புத்தூர் செல்லும் சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தங்கம்மாள் உறவினர் ஒருவர் கூறும்போது, எம்.புத்தூர் சத்திரம் பகுதியில் வசிப்பவர் இறந்துபோனால் மயானத்திற்கு எடுத்துச் செல்லும்போது பாதையில் தனி நபர் ஒருவர் தனது நிலம் இருப்பதாகக் கூறி அவ்வப்போது இடையூறு செய்து வருகிறார். இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே எங்களுக்கு என மயானத்திற்கு செல்வதற்கு நிரந்தர பாதை அமைத்து தர வேண்டும் என்று கூறினார் . பொதுமக்கள் சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலர்கள் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருவாய்த்துறை மூலம் மயானத்திற்கு செல்லும் பாதை அமைத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து தங்கம்மாள் சடலத்தை உறவினர்கள் மயானத்திற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

Tags : road ,cemetery ,
× RELATED 8 வழி சாலைக்கு எதிரான போராட்டம்...