அரியலூர் அருகே சிலிண்டர் வெடித்து 2 கூரைவீடுகள் சேதம்

அரியலூர்,நவ.5: அரியலூர் அருகே சமையல் செய்து கொண்டிருந்தபோது காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் 2 கூரைவீடுகள் எரிந்து சேதமாகின. அரியலூர் அருகேயுள்ள வாரணவாசி காலனித் தெருவைச் சேர்ந்தவர் மணிவேல் மனைவி பூபதி. இவர் நேற்று காலை சமைத்துக்கொண்டிருந்த போது, திடீரென காஸ் சிலிண்டரில் உள்ள டியூப்பில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை கவனித்த பூபதி குடும்பத்தினர் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறிய போது காஸ் சிலிண்டர் வெடித்து குடிசை முழுவதும் தீப்பற்றியது. இந்த தீ மளமளவென அருகே வசிக்கும் செல்லக்கண்ணு என்பவர் வீட்டிலும் பரவியது. இதனை கண்ட அருகிலிருந்தவர்கள் அரியலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து விரைந்து வந்த அரியலூர் தீயணைப்பு வீரர்கள், தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். எனினும் இரு குடிசை வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இதில் ஒரு லட்சம் மதிப்பிலான உடமைகள், பாத்திரங்கள், பீரோ உள்ளிட்ட பொருட்கள் சேதமாகின. இதையறிந்த அரசு தலைமை கொறடா தாமரை.ராஜேந்திரன், கலெக்டர் ரத்னா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 ஆயிரமும், அரிசி மற்றும் வேஸ்டி, சேலைகளை வழங்கினர். மேலும், வீடு இழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக வீடு கட்டித்தர ஏற்பாடு செய்யும்படி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். அரியலூர் தாசில்தார் கதிரவன், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories:

>