×

பள்ளபட்டி பகுதியில் டெங்கு காய்ச்சல், கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

அரவக்குறிச்சி, நவ. 5: அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டியில் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் தீவிர கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வட கிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வரும் வேளையில் ஆங்காங்கே பொது மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகும் சூழ்நிலையில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின் பேரில் அனைத்து பகுதிகளிலும் தீவிர கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளப்பட்டி பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் கொசுப்புழு ஒழிப்பு மற்றும் முதிர் கொசு அழிப்பு பணியை தீவிரப்படுத்தி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பேரணி நடைபெற்றது. பள்ளப்பட்டி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் முஹம்மது இஸ்மாயில் தலைமை வகித்தார். பள்ளப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மலைக்கோவிலூர் வட்டார மருத்துவ அலுவலர் ஆசாத் அலி துவக்கி வைத்தார். பேரணி பள்ளப்பட்டி மேல்நிலை பள்ளியில் துவங்கி திண்டுக்கல் ரோடு, ஷாநகர், பஸ் நிலையம் வழியாக பேரூராட்சியில் முடிவு அடைந்தது.

இதில் கொசுப்புழு ஒழிப்பு மற்றும் சுற்றுப்புற தூய்மை குறித்த விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் குறித்த மாதிரிகள் காண்பிக்கப்பட்டது.
இப்பேரணியில் பள்ளப்பட்டி அரசு மேல்நிலை பள்ளி அப்பகுதியின் பல்வேறு பள்ளிகளின் தூய்மை தூதுவர்கள் அமைப்பிலிருந்து சுமார் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்களுடன் கலந்து கொண்டனர். இத்தூய்மை தூதுவர்கள் அமைப்பானது முற்றிலும் கொசுப்புழு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இத்தூய்மை தூதுவர்கள் பள்ளிகள், அவர்களது வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கொசுப்புழு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி மற்றும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.

இதற்காக அவர்களுக்கு பயிற்சிகள் பொது சுகாதாரத்துறையால் அளிக்கப்பட்டு வருகின்றது. இப்பேரணியை தொடர்ந்து ஒரு மஸ்தூர், ஒரு துப்புரவு பணியாளர் மற்றும் 4 மாணவர்கள் கொண்ட 30 குழுக்களாக பிரிக்கப்பட்டு பள்ளப்பட்டி பேரூராட்சி பகுதியில் வீடு வீடாக சென்று கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். பள்ளி சிறார் நலத்திட்ட மருத்துவ குழு மருத்துவர் ஜெய உள்ளிட்ட குழுவினர் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் இப்பேரணியில் பள்ளப்பட்டி மற்றும் அரவக்குறிச்சி பேரூராட்சி மஸ்தூர்கள், துப்புரவு பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பயிற்சி மாணவர்கள், பரப்புரையாளர்கள், மேல்நிலை தொட்டி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த தீவிர கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பேரணி மற்றும் தடுப்பு பணிகளை மலைக்கோவிலூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளர்கள் கருப்புசாமி, அழகுராஜா, துப்புரவு ஆய்வாளர் குருசாமி, ரமேஷ் உள்ளிட்டவர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Tags : area ,Pallapatti ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...