×

கரூர் வெங்கமேட்டில் மீன் மார்க்கெட் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு

கரூர், நவ. 5: கரூர் வெங்கமேடு பகுதியில் குளத்துப்பாளையம் செல்லும் வழியில் நகராட்சி கட்டிடம் கட்டப்பட்டு மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடம் எந்தவித பயன்பாடின்றி இருந்த நிலையில் பழுதடைந்தது. திரும்பவும் கட்டிட வளாகம் சீரமைக்கப்பட்டு, கடைவீதி பகுதியில் செயல்பட்ட மீன் கடைகள் அனைத்தும் இங்கு வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிட வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தாலும் 20க்கும் மேற்பட்ட கடைகளில் மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை வழக்கம் போல மீன் வியாபாரிகளில் சிலர் கடையை திறந்து பார்த்த போது, அதிர்ச்சியடைந்தனர்.

இரண்டு கடைகளின் உட்புற பகுதியில் மேற்கூரை இடிந்து உள்ளே விழுந்த நிலையில் இருந்தது. இதனால் அனைத்து தரப்பினர்களும் அதிர்ச்சியடைந்தனர். கடை திறக்கப்பட்டு வியாபாரிகள் இருக்கும் போது விழுந்திருந்தால் பலர் காயமடைந்து பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தியிருக்கும் என கூறப்படுகிறது. இந்த கடை மட்டுமின்றி, வளாக பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் அனைத்தும் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, வியாபாரிகள் மற்றும் வந்து செல்லும் பொதுமக்கள் நலன் கருதி, அதிகாரிகள் தலையிட்டு மாற்று ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : collapse ,fish market building ,Karur Venkamet ,
× RELATED அடையாறு ஆற்றில் கரைபுரண்டு ஓடும்...