×

தேனி மாவட்டத்தில் கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பு தரமான மருந்து தெளிக்கப்படுமா?

தேவாரம், நவ.5: தேனி மாவட்ட கிராம ஊராட்சிகளில் அதிகரிக்கும் கொசுக்களால் மக்கள் திண்டாடுகின்றனர். எனவே, தரமான கொசுமருந்துகளை அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், கடமலை-மயிலை, ஆண்டிபட்டி, தேனி, கம்பம், சின்னமனூர், போடி என 8 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.  இதில் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான  மக்கள் வசிக்கின்றனர். கடந்த சில தினங்களாக பெய்யக்கூடிய மழையால் இங்கு வசிக்ககூடிய கிராம மக்கள்  சிரமங்களை சந்திக்கின்றனர்.கிராம ஊராட்சிகளில்  உள்ள கிராமங்களில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் லார்வாக்கள் கொசுக்களாக மாறி மக்களை படாதபாடு படுத்துகின்றன. ஆனால், தேங்கிக்கிடக்கும் தண்ணீரை அப்புறப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் ஊராட்சி நிர்வாகம்  நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் பகல் நேரங்களிலேயே கொசுக்கள் மக்களை மிரட்டுகின்றன.

கொசுக்கள் இருப்பதாக புகார்கள் வந்தால் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சார்பில் கொசு மருந்துகள் தெளிக்கப்படுகிறது. குறிப்பாக, மண்ணெண்ணெய் கலந்து அடிக்கப்படும் மருந்துகள் தரமானதாக இல்லை. பெயரளவில் அடிக்கப்படும் கொசுமருந்துகளால் கொசுக்களும் சாவதில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, இவை தரமற்ற மருந்துகளா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கிராமப்புறங்களில் மக்கள் வசிக்கும் ஊராட்சிகளில் மக்களை நோய்களில் இருந்து காப்பாற்றிட வட்டார வளர்ச்சி  அதிகாரிகள் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் மவுனம் காக்கின்றனர். எனவே, கொசுக்களை அடியோடு ஒழித்திட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `` கொசுக்களின் உற்பத்தியை தடுத்திட தமிழக அரசு உத்தரவிட்டும் கிராம ஊராட்சிகளில் உத்தரவு காற்றில் பறக்கிறது. கிராம பஞ்சாயத்துக்களில் பகலில் கடிக்கும் கொசுக்களால் டெங்கு பரவும் ஆபத்து உள்ளது. எனவே, தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட அதிகாரிகள் இனியாவது முன்வருவதுடன், தரமற்ற கொசுமருந்துகளை வாங்கி பயன்படுத்துவதை இனியாவது நிறுத்த வேண்டும்’’ என்றனர்.

Tags : Theni district ,
× RELATED கோம்பை பகுதியில் வாகன...