×

கோயிலுக்கு சொந்தமான ஆடுகளை ஏலம் விடுவதில் இருதரப்பு மோதல் திருப்புத்தூர் அருகே பரபரப்பு

திருப்புத்தூர், நவ.5:  திருப்புத்தூர் அருகே பையூர் கிராமத்தில் ஆடுகளை ஏலம் விடுவதில் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. திருப்புத்தூர் அருகே கண்வராயன்பட்டி ஊராட்சியில் பையூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில்  ஸ்ரீ கருமலைச்சாத்த அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான  ஆடுகளை விற்று பணம் பிரிப்பதில் இரு தரப்பினருக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து இரு தரப்பினரும் தேவகோட்டை கோட்டாட்சியர் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்கள் தரப்பு கருத்துக்களை முன்வைத்தனர். இதனையடுத்து கோட்டாட்சியர் சங்கரநாராயணன், ‘‘இரு தரப்பினரும் சேர்ந்து, கருமலைச்சாத்த அய்யனார் கோயிலுக்கு சொந்தமான  வெள்ளாடுகளை விற்பனை செய்து அதில் வரும் பணத்தில், ஆடு மேய்த்தற்கான கூலி நிலுவையை வழங்க வேண்டும். பின்னர் மீதமுள்ள மொத்த பணத்தையும்,  கோயிலுக்கு சொந்தமான வேறு ஏதும் பணம் மற்றும் நகைகள் இருந்தால் அதையும் ‘ஏ’ மற்றும் ‘பி’ பார்ட்டி பெயரில் இணை வங்கி  கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். இரு தரப்பினர்கள் சம்மதத்தின் பேரில்  மேற்படி தொகையை பொது நிகழ்விற்காக பயன்படுத்தி கொள்ளலாம்’’ என உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று ஆடுகளை ஏலம் விடுவதாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து கோயிலுக்கு சொந்தமான 110 ஆடுகளையும் ஏலம் எடுக்க வெளியூர்களில் இருந்து ஆட்டு வியாபாரிகள் சிலர் பையூருக்கு வந்தனர். பையூர் கிராமத்திற்கு வட்டாட்சியர் ஜெயலெட்சுமி, இன்ஸ்பெக்டர் ஆனந்தி, எஸ்.ஐ.க்கள் முத்துகிருஷ்ணன், சிவாஜி உள்ளிட்ட போலீசார் வந்தனர். அங்கு ஒரு தரப்பினர் வந்தநிலையில், மற்றொரு தரப்பினர் வரவில்லை. வெகு நேரம் ஆகியும் மற்றொரு தரப்பினர் வராததால் வட்டாட்சியர் ஜெயலெட்சுமி மற்றும் போலீசார் அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர் அங்கிருந்த ஒரு தரப்பினர் மட்டும் ஆடுகளை ஏலம் விட்டனர்.

Tags : dispute ,
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...