×

மானாமதுரையில் யூரியா தட்டுப்பாடு; பயிர்கள் பாதிப்பு கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வலியுறுத்தல்

மானாமதுரை, நவ.5:  மானாமதுரை பகுதியில் யூரியா தட்டுப்பாடு காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் கூட்டுறவு விவசாய சங்கங்கள் மூலம் உரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளாக பருவமழை பொய்த்துபோனதால் நெற்பயிர்கள் கருகின. விளைச்சல் இல்லாமல் போனதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்தாண்டு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மானாமதுரை வைகை பாசனப்பகுதி கிராமங்களான கட்டிக்குளம், கொம்புக்காரனேந்தல், வாகுடி, முத்தனேந்தல், இடைக்காட்டூர், பதினெட்டாங்கோட்டை, கிருங்காகோட்டை, ராஜகம்பீரம், கால்பிரவு, பீசர்பட்டினம், கீழப்பசலை, மேலப்பசலை, ஆதனூர் பகுதிகளில் மட்டும் ஐம்பதாயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் விதைக்கப்பட்டுள்ளது.
மேலும் விதைப்பு முறையில் மாங்குளம், சித்தலக்குண்டு, சீகன்குளம், விளாக்குளம், பெருங்கரை, முத்துராமலிங்கபுரம், புளியங்குளம் உள்ளிட்ட பகுதியில் இருபது நாட்களுக்கு முன்னரே நெல் பயிரிடப்பட்டுள்ளது. நடவு, விதைப்பு முறையில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு 15 ம் நாள், 30ம் நாள், 45ம் நாள்களில் உரமிடுவது அவசியம் என்பதால் விவசாயிகள் அரசு கூட்டுறவு விவசாய சங்கம் மூலமும் தனியார் கடைகளிலும் உரங்களை பெறுவது வழக்கம்.

ஆனால் இந்த முறை இதுவரை விவசாய சங்கங்களுக்கு உரம் வரவில்லை. இதனால் தனியார் கடைகளில் அலைமோதும் விவசாயிகளிடம் உரக்கடை வைத்துள்ளவர்கள் கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து விவசாயி சங்கமுத்து கூறுகையில், மானாமதுரை வட்டாரத்தில் நெல் பயிர்களுக்கு தேவையான உரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு சார்பில் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுத்து, உரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும். பருவ மழை தொடர்வதால், விவசாயிகள் அதிகளவில் நெற் பயிர்கள் பயிரிட்டுள்ளனர். யூரியா கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் யூரியா வழங்க வேண்டும் என்றார்.

Tags : Manamadurai ,
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை