×

சாலைக்கிராமத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்றாமல் இழுத்தடிப்பு

இளையான்குடி, நவ.5:   சாலைக்கிராமத்தில் விதிமீறிய டாஸ்மாக் கடைகளுக்கு இடம் தேர்வு செய்யாமல் இழுத்தடிப்பதாக மாதர் சங்கம் பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளது. இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் மக்கள் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்டிலும், குடியிருப்பு பகுதியிலும் விதிமீறி இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு வரும் குடிமகன்களின் தொந்தரவால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே  கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஆர்ப்பாட்ட முடிவில் வருவாய்த்துறை மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில் உடனடியாக இடம் தேர்வு செய்யப்பட்டு, கடைகள் அப்புறப்படுத்தப்படும் என உறுதியளித்தனர்.

ஆனால் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக குறைதீர் கூட்டத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில்  டாஸ்மாக் நிர்வாக மேலாளர் அளித்த பதிலில்,  டாஸ்மாக் விதிகள் 2003 விதி எண்8(1)ன் படியும், அரசாணை எண் 32ன் படியும் இடம் தேர்வு செய்யும் பணி நடப்பில் உள்ளது என கூறப்பட்டுள்ளது. இதனால் மாதர் சங்கத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இடத்தை தேர்வு செய்யும் பணிதான் இவ்வளவு நாளாக நடக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் வருமானம் அதிகமாக வருகிற காரணத்திற்காக, மக்களின் கோரிக்கைகளை புறக்கணித்துவிட்டு,  டாஸ்மாக் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்துகிறது என குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags : Strike ,task force shops ,
× RELATED கால்வாய் தூர்வாரும் பணி நிறுத்தம்; மானாமதுரை அருகே பரபரப்பு