×

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவர்கள் இல்லை மதுரைக்கு அனுப்பப்படும் நோயாளிகள்

சிவகங்கை, நவ.5:  சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வருவோர் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். சிவகங்கையில் கடந்த 2011ம் ஆண்டில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பதில் புதிய மருத்துவமனையும், 2012ல் மருத்துவக்கல்லூரியும் இயங்கத்தொடங்கியது. இங்கு தினந்தோறும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகள் பிரிவில் 500 படுக்கைகள் உள்ளன. வெளி நோயாளிகள் பிரிவில் தினமும் சுமார் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கர்ப்பிணி பெண்கள் சுமார் 50 பேர் தினமும் பல்வேறு பரிசோதனைக்காக வருகின்றனர். இங்கு நரம்பியல் பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவில் நவீன வசதிகள் கொண்ட கருவிகள் உள்ளன. ஆனால் நரம்பியல் பிரிவிற்கான மருத்துவர்கள் நியமனம் செய்யப்படவில்லை. விபத்தில் சிக்குபவர்களுக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை மட்டும் செய்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகின்றனர். இரண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நேர விரயத்தால் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. இதனால் வேறு வழியில்லாமல் பலர் தனியார் மருத்துவமனை செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இம்மருத்துவமனைக்கு மதுரை மருத்துவமனையில் இருந்து வாரந்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமை, காலை இரண்டு மணி நேரம் மட்டும் நரம்பியல் மருத்துவர் வருகிறார். அவரும் வெளி நோயாளிகள் பிரிவில் சிகிச்சையளிக்கிறார். உயிர் பாதுகாப்பிற்கான சிகிச்சைகளுக்கு மருத்துவர்கள் இல்லாமல் சாதாரண மருத்துவமனை போலவே மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பெயரளவில் இயங்கி வருகிறது. எனவே நரம்பியல் மருத்துவர் நியமிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் முத்துக்கருப்பன் கூறுகையில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்றால் அனைத்து நோய்களுக்கான மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால் மிக முக்கிய துறையான நரம்பியல் துறைக்கே மருத்துவர் இல்லை.

எவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்தாலும் மதுரையில் இருந்தே மருத்துவர் வரவேண்டும். தினந்தோறும் உயிருக்கு போராடும் ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் போதிய மருத்துவ வசதி இல்லாமல் தொடர்ந்து மதுரைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். முதலுதவி செய்து மதுரைக்கு அனுப்பவதற்காக இங்கு மருத்துவக்கல்லூரி திறக்கப்படவில்லை. உயிர்காக்க தேவையான வசதிகள் இல்லாமல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என பெயரளவில் இயங்கி வருகிறது. தொடர்ந்து காலம் கடத்தாமல் நரம்பியல் உள்ளிட்ட முக்கிய துறை மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : neurologists ,Government Medical College Hospital ,
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...